மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் மீனாட்சி அம்மனுக்கு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமூக வலைதளங்களான யூடியூப் மற்றும் முகநூல் வழியாக வீடுகளில் இருந்தவாறு சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் விழா கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வான பட்டாபிஷேகம் நிகழ்வும் நடந்தது. கரோனா ஊரடங்கு காரணமாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் இணையதளம் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
எட்டாம் நாளான பட்டாபிஷேக நிகழ்வில் மீனாட்சி அம்மன் முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மனிடம் இருந்து செங்கோலைப் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார்.
மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக்கு விஜயம் நாளை(ஏப்.23) நடைபெறுகிறது. விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 24ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.