மதுரை மீனாட்சி கோயிலின் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் நான்கு சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்று திருக்கல்யாணத்தை நடத்துவது எனக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், காவலர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடைபெற்ற நிலையில், திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுமா எனப் பொதுமக்களிடம் கேள்வி எழுந்தது.
திருக்கல்யாணம் (கோப்புப் படம்) இந்நிலையில், முன்னரே அறிவித்தவாறு வருகின்ற மே 4ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருந்த மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நான்கு சிவாச்சாரியர்களைக் கொண்டு நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காலை 8.30-க்குத் தொடங்கி 10.15 மணிவரை திருக்கல்யாண வைபோகம் நடைபெறும் எனவும் காலை 9.05 மணிக்குத் தொடங்கி 9.29 மணிவரை திருக்கல்யாணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்க்க, www.maduraimeenakshi.org என்ற இணையதளம், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யூ-ட்யூப் சேனல் உள்ளிட்டவற்றில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.