தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ இட ஒதுக்கீடு: விசித்திரமான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் - மருத்துவ கல்லூரி

மதுரை: மருத்துவ கல்லூரி 7.5% உள் இட ஒதுக்கீட்டில் ஒரு இடம் ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்த மாணவியின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Nov 18, 2020, 4:05 PM IST

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பள்ளி ஓடை கிராமத்தை சேர்ந்த மாணவி அரிவிக்கா சார்பாக அவரது தந்தை அறிவழகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பள்ளி ஓடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது மகள் 1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலும் பயின்றார். பின்னர் குடும்ப வறுமை சூழல் காரணமாக எனது மனைவியின் சொந்த ஊருக்கு இடப்பெயர்வு செய்ய நேரிட்டது. அங்கு அரசு பள்ளி இல்லாத காரணத்தால், சிலரது உதவியால் எனது மகள் ஆறாம் வகுப்பு தனியார் உதவிபெறும் பள்ளியில் இலவச கல்வி பயின்றுள்ளார்.

பின்னர்தான் மீண்டும் சொந்த ஊரான கிராமத்திற்கு வந்து அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடத்தையும் 11, 12ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வை எந்த தனியார் நீட் பயிற்சி மையமும் செல்லாமல் தன் மகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் துணையுடன் எழுதி 270 மதிப்பெண்களை எடுத்துள்ளார் .

அரசு அறிவித்துள்ள 7.5% உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மருத்துவ உள் இட ஒதுக்கீடு ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே என்றுள்ளது.

ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்த கூடிய சூழலில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் ஆறாம் வகுப்பு அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் எனது மகள் பயின்றுள்ளார். இதனால் தனது மகளுக்கு தற்போது மருத்துவ 7.5% உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

எனவே தனது மகள் அரசு பள்ளியில் பயின்றதாக கருத்தில் கொண்டு தனது மகளை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் அவரது பெயரை இணைத்து ஒரு மருத்துவ பிரிவுக்குகான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்". என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மாணவி குடும்ப வறுமையின் காரணமாக ஆறாம் வகுப்பு மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளியில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் படிக்கவைக்கப்பட்டார். மீண்டும் அரசு பள்ளியில் இணைந்து 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். எனவே இவருக்கும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பொருந்தும் என வாதிட்டனர்.

ஆனால் நீதிபதிகள் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அரசு பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இந்த மாணவிக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details