விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் 14 வார்டுகளைக் கொண்ட நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கான தலைவர் பதவியை நிரப்புவது தொடர்பில் காளீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், " நரிக்குடி ஒன்றிய பஞ்சாயத்தில் மொத்தமாக 14 வார்டுகள் உள்ளன. அதில் மூன்றாவது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த நான் வெற்றிப் பெற்றிருந்தேன். அதன் காரணமாக ஒன்றியத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இருவரும் சமமாக 7 வாக்குகள் பெற்றோம். இந்நிலையில் குலுக்கல் முறையில் ஒன்றியத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், திடீரென தேர்தல் நடந்த அறைக்குள் புகுந்து அதிமுகவை சேர்ந்த 14ஆவது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் கலவரத்தில் ஈடுபட்டார்.
அவரது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு யூனியன் அலுவலகத்தில் உள்ள கணினிப் பொருட்களை எல்லாம் சூறையாடினார். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த அருப்புக்கோட்டை காவல் டிஎஸ்பி வெங்கடேஷை தாக்கினர், அதில் டிஎஸ்பி வெங்கடேஷ் காயமடைந்தார். இவை அனைத்தும் யூனியன் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.