சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தடய அறிவியல் நிபுணர்கள் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யபட வேண்டும், ஆனால் தமிழகத்தை பொருத்தவரை மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவகல்லூரிகளில் மட்டுமே தடய அறிவியல் நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக மருத்துவ குறியீடு விதி 621 ன் படி பிரேத பரிசோதனை நடத்தபட்ட அன்றைய தினமே பிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அல்லாமல் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்துவிட்டு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்ததாக அறிக்கை தருகின்றனர்.