மதுரை: மதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியா கூட்டணியில் திமுக அகில இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட நாடு ஆட்சி தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புயல் மழையின் தாக்கத்தை முன்கூட்டியே அறிந்து, திட்டமிட்டு பணியாற்றியதால் சென்னை பேரிடர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளது.
புகைக் குண்டுக்குப் பதிலாக வெடிகுண்டு வீசியிருந்தால்...நிலைமை என்ன?: புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலை போன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளது. பிரிட்டிசார் காலத்தில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் இப்போது வரை கம்பீரமாக இருக்கும்போது, புதிய கட்டிடத்திற்காகப் பணத்தைக் கொட்டி இருக்கிறார்கள். நான்கடுக்கு பாதுகாப்பையும் தாண்டி உள்ளே சென்று மஞ்சள் புகை வருவது போன்ற பொருளை வீசி இருக்கிறார்கள். அதற்குப் பதிலாக வெடிகுண்டை வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்கும்.
ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பாஜக: பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இல்லை கவனக் குறைவு உள்ளது. இதனைக் கண்டித்து இது பற்றிய விவாதம் நடத்த வேண்டும் என்று சொன்னதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரைக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கக் கூடாது என வெளியேற்றியுள்ளனர். மக்களவையிலும் 14 எம்பிக்களை நீக்கி வைத்துள்ளனர். என்ன குற்றம் செய்தார்கள்? பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி கேட்டதற்காகச் சபாநாயகர் ஓம் பிர்லா இவர்களை நீக்கியுள்ளார். ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதில் பாஜகவினர் கவனமாக இருக்கின்றனர்.