மயிலாடுதுறை: சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவரின் மனைவி சத்யா (31). இவர் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறும்போது, அவர் கைப்பையில் வைத்திருந்த தங்க நகைகள் காணமால் போயுள்ளது.
பின்னர், இது குறித்து சத்யா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து, பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட பேருந்து, மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது, அனைவரும் பேருந்தில் ஏற முயலும்போது, ஒரு பெண் மட்டும் தன் குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பேருந்தில் இருந்து இறங்குவது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதற்கு முந்தைய சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோது சம்பந்தப்பட்ட பெண் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறி இறங்குவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்தப் பெண் குறித்த விபரங்களை சேகரித்தபோது, அந்தப் பெண் உள்ளிட்ட சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு குழுவாக வந்து, கடலூர் மாவட்டம் முட்லூர் பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தொடர்ந்து அந்த பெண்ணைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அந்தப் பெண் சம்பவ இடத்தில் அணிந்திருந்த அதே உடையுடன் சாலை ஓரம் அமர்ந்திருந்ததைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள முள்ளுக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மனைவி துர்கா (25) என்பதும், ஆந்திராவில் இருந்து ஒரு குழுவாக வந்து தங்கி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.