மதுரை: ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட பெருநகரமாய்த் திகழும் மதுரையிலும், மதுரையைச் சுற்றியும் பார்ப்பதற்கு உகந்த பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதனை எவ்வாறு சென்று பார்ப்பது என்பதில் புதிதாய் வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் குழப்பங்களை போக்கும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் மதுரைப் பிரிவு மதுரையின் பாரம்பரியச் சின்னங்கள் குறித்த புதிய வரைபடம் ஒன்றை இன்று வெளியிட்டது.
இதுகுறித்து இன்டாக் மதுரை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், ''இன்று மதுரையின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளோம். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் அச்சு வடிவத்திலும், இணையதளத்திலிருந்து தரவிறக்கும் வகையிலும் வெளியாகியுள்ளது.
https://intachmadurai.org/heritage-map/ என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதனை கூகுள் வரைபடத்தோடு இணைத்துள்ள காரணத்தால், சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மதுரையில் பாரம்பரிய இடங்களுக்குச் செல்லும் வகையில் கூகுள் வரைபடமே சிறந்த முறையில் வழிகாட்டும். மேலும் அதில் படங்கள் மட்டுமன்றி, அந்த இடங்களைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
மதுரையின் ஆன்மா என்பது அதன் பாரம்பரியமான தலங்களில் தான் உள்ளது. பாறை ஓவியங்கள், கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், சமணப் படுகைகள், இந்து மதம் தோன்றியதற்குப் பின்னால் உருவான இடங்கள், ஆங்கிலேயர் காலத்து பாரம்பரியங்கள் என 20 கி.மீ. சுற்றளவுக்குள் மதுரையில் உள்ளன.