மதுரை:எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் சார்பில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற முழக்கத்துடன் மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நேற்று (ஜன.7) மதுரையில் நடைபெற்றது. மதுரை, வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.
இதில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் அபுபக்கர் சித்திக் மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீத் அகமது துவக்க உரையாற்றினார்.
மேலும், கட்சியின் பொதுச்செயலாளர்கள் அகமது நவவி அஉமர் பாரூக் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் ரத்தினம், நஜ்டா பேகம் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் தரித்து உரையாற்றினர். கட்சியின் மாநில செயலாளர்கள் ஏ.கே.கரீம் ராஜா உசேன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து இம்மாநாட்டில், அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் தலைமையுரையாற்றினார்.
அதேபோல, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் சத்தார், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள மாநில தலைவர் மூவாற்றுப்புழா அஷ்ரட் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மஜீத் எஸ்.டி.பி.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி, முகமது பாரூக் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர். மேலும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- இஸ்லாமியர்கள் ஆயுள் சிறைவாசிகளுக்கு சட்டரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
- 'நீட் தேர்வு'-க்கு விலக்கு என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையைப் போக்க வேண்டும்.
- மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும். தொழில்நிறுவனங்களுக்கான பிக்ஹவர் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
- சிறுபான்மை இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.
- சச்சார் கமிட்டி போன்ற தமிழக இஸ்லாமியர்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டி அமைக்க வேண்டும்.
- பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் அனுமதியை எளிமையாக்க வேண்டும்.
- பல்கலைக்கழக துணை வேந்தர் டி.என்.பி.எஸ்.சி பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தவர்களையும் நியமிக்க வேண்டும்.
- ப்ரீ மெட்ரிக்கல்வி உதவித் தொகை திட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டும்.
- நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
- அரசியல் பழிவாங்கும் ஏவல் கருவியாக மாற்றப்படும் விசாரணை அமைப்புகள் கண்டிக்கத்தக்கது.
- சிறுபான்மை வெறுப்பு நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
- கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
- படித்த இளைஞர்களை ஏமாற்றாமல் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் விரைவாக நிரப்ப வேண்டும்.
- ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்டு, அதன்மூலம் சிறுபான்மை சமூகம் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
- மாநில சிறுபான்மை சமூக அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை 29 முக்கிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: வேலூரில் அகில இந்திய அளவில் நடந்த கராத்தே போட்டி.. 2000 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு..