தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தூய்மைப் பணியாளர்களுக்கு தரச்சான்று பெற்ற உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை’ - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: தூய்மைப் பணியாளர்களுக்கு தரச்சான்று அளிக்கப்படாத பாதுகாப்பு உபகரணங்கள்தான் வழங்கப்படுகின்றன என மதுரை சிஐடியு பொதுச் செயலாளரான பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

By

Published : Jul 18, 2020, 8:01 PM IST

கரோனா நெருக்கடியில், களத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்தப் பணியில் நிரந்த பணியாளர்களைவிட ஒப்பந்த பணியாளர்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். இப்படி ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கும் ஒரு நாள் பணி நிரந்தரம் கிடைக்கும் என்றே நம்பி நாள்களைக் கடத்துகின்றனர். எதார்த்தமோ... அவர்களுக்குக் கடைசிவரை எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை.

இது குறித்து மதுரை சிஐடியு பொதுச் செயலாளரான பாலசுப்பிரமணியன், “தமிழ்நாட்டைப் பொருத்தவரை 12 மாநகராட்சிகள் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் 180-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் 12 ஆயிரத்து 700 -க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில் நிரந்தர பணியாளர்களை ஒப்பிடும்போது ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய வேறுபாடு மட்டுமன்றி மிக அதிக வேலைப்பளுவும் அளிக்கப்படுகிறது.

சிஐடியு மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியனின் நேர்காணல்

மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் சராசரியாக மூன்றில் இருந்து ஆறு பேர் பணியாற்றுகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இந்த 100 நாள்களில் மொத்தமே நான்கு முறை தான் இவர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கையுறை பல பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை, தரச்சான்று வழங்கப்பட்ட உபகரணங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இவர்கள் நடத்தப்படுகிறார்கள்”என்றார்.

கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 151 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். கையால் மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டம் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஆனால் அரசு சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார் பாலசுப்பிரமணியன்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கடந்த இருபதாண்டுகளில் இந்தியா முழுவதும் உயிரிழந்த பாதாள சாக்கடை தொழிலாளர்களில் ஐந்தில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற விஷவாயு மரணத்தையும், அதன் பிறகு சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த மரணத்தையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 151 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த ஓராண்டில் 16 பேர் மரணமடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மட்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏறக்குறைய 4 ஆயிரத்து 500 தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட இழப்புகள் மதுரையில் நிகழ்ந்துள்ளன.

இதற்கு மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில நோய்கள் காரணம் என்றாலும் கூட அரசு தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வதுடன் மருத்துவக் காப்பீடு செய்து கொடுக்கவேண்டும்.

ஒப்பீட்டளவில் மற்ற துறைகளில் வேலை பார்பவர்களைவிட இத்துறையில் மரணங்கள் வெகுவிரைவில் நடைபெறுகின்றன. அதற்கு இந்த துறையில் செய்யப்படும் வேலையின் சூழல் ஆபத்தானதாக இருப்பதுதான் காரணம். வருங்காலங்களிலாவது அவர்களுக்குரிய கெளரவமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'நாங்க செத்தா நிவாரணம்கூட கிடையாது'- அதிர்ச்சியில் உறைய வைக்கும் தூய்மைப் பணியாளர்களின் அனுபவம்!

ABOUT THE AUTHOR

...view details