மதுரை: திருநெல்வேலி மாவட்டம், மதகநேரியைச் சேர்ந்த, தகவல் ஆர்வலர் வரதன் அனந்தப்பன் என்பவர் வாஞ்சி மணியாச்சி - நாகர்கோயில் இரட்டை ரயில் பாதை தாமதம் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ”வாஞ்சிமணியாச்சி - நாகர்கோயில் இரட்டை ரயில் பாதைத் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களின் வழியாக மொத்த நீளம் 102.19 கி.மீ ஆகும்.
இந்த திட்டம் முடிவடைந்தால், நிலையங்களில் காத்திருப்பு தவிர்க்கப்பட்டு, தற்போதைய பயண நேரத்தில் 25% குறையும். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் வழித்தடமாக மாறும். வந்தே பாரத், தேஜஸ் போன்ற புதிய பயணிகள் ரயில்களை இந்த தடத்தில் இயக்க முடியும். சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதோடு தொழில் வளமும் பெருகும்.
திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 01.10.2017. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 1752.25 கோடி. 73% பணிகள் முடிந்து, 61.23 கி.மீ தூரம் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் உள்ள 24.49 கி.மீ. நாங்குநேரி - மேலப்பாளையம் ரயில் பாதை முடியும் தருவாயில் உள்ளது.