ராமநாதபுரம் மாவட்டம், சூரங்கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சாலை பயன்பாட்டிற்கான நிலத்தை பலர் வணிக ரீதியான கட்டடங்களுக்கான பகுதி என கூறி நில விற்பனை நடந்துள்ளது.
இதுபோன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. இதனால், பொதுமக்கள் நிலங்களை வாங்குவதில் ஏமாற்றமடைகிறார்கள். மாஸ்டர் பிளான் விவரம் தெரியாத நிலையில் பலரும் சுலபமாக நிலங்களை வகை மாற்றம் செய்து விற்கும் நிலையே உள்ளது. வழக்கமாக மாஸ்டர் பிளான் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களில் புதிய மாற்றியமைக்கப்பட்ட மாஸ்டர் பிளானை உடனடியாக நகர் மற்றும் ஊரமைப்பு திட்டம் மற்றும் அரசின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு