மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக ரூ.1,295 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து 115 எம்எல்டியும் (மில்லியன் லிட்டர்), வைகை ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் மூலம் 30 எம்எல்டியும், காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் 10 எம்எல்டி என 155 எம்எல்டி தண்ணீர் பெறப்பட்டு 100 வார்டுகளுக்கும் நபர் ஒருவருக்கு தினசரி 100 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோடைக் காலங்களில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதை நிவர்த்திசெய்யும் வகையிலும் மதுரை நகரில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்கவும் 'அம்ருத்' திட்டத்தின்கீழ் முல்லைப்பெரியாறிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இத்திட்டம் மத்திய, மாநில அரசு நிதியுதவி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியோடு நிறைவேற்றப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கு 2017ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல்பெறப்பட்டது. இதனையடுத்து, அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் உள்ளிட்ட தொடக்கக் கட்டப்பணிகள் தொடங்கின.
இடையில் மக்களவைத் தேர்தல், கரோனா பொதுமுடக்கம் போன்றவற்றால் திட்டப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது திட்டத்திற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.
முதல் கட்டம்:லோயர் கேம்ப் பகுதியில் ரூ.14.78 கோடியில் தடுப்பணை கட்டுவது, நீரேற்று நிலையம் அமைப்பது, பின்னர் அங்கிருந்து ரூ.318 கோடி மதிப்பில் 96 கி.மீட்டர் தூரம் குழாய்கள் அமைத்து தண்ணீரை பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவருதல்.
இரண்டாம் கட்டம்:பண்ணைப்பட்டியில் ரூ.122.90 கோடி செலவில் 125 எம்எல்டி தண்ணீரைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், தண்ணீர் கொண்டுவருவதற்கான கால்வாய்கள் அமைத்தல், தண்ணீர் சேமிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வது.