மதுரை:காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் தாக்கபட்டு மரணம் அடைந்தது குறித்து உரிய இழப்பீடு மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனவுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியை சேர்ந்தவர் முத்து கார்த்திக். இவரை மதுரை எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ், சார்பு ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவலர் ரதி ஆகியோர் திருட்டு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், 3 நாள் சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து பின்னர் பொய் வழக்கில் கைது செய்ததாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முத்து கார்த்திக் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் அவரின் தாயார் எம்.ஜெயா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மரணம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.
மேலும், மனுவில் மகனின் மரணம் தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிபிசிஐடி போலீசார் விசாரித்து காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உட்பட 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும் அந்த 3 பேர் மீது இதுவரை துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், 50 லட்ச ரூபாய் இழப்பீடும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி தனபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஆர்.எம். அன்பு நிதி, மனுதாரருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி பாதிக்கப்பட்ட நபருக்கு 25 லட்ச ரூபாய் வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு வேலை கொடுப்பது சம்பந்தமாக அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:Cm House bomb threat : முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் திடீர் மிரட்டல்!