மண்ணையும் பெண்ணையும் காக்கும் 'மஞ்சள் பை' - பிளாஸ்டிக்கை புறந்தள்ளும் பெருமைக்குரிய முயற்சி - சிறப்பு தொகுப்பு மதுரை: மண்ணையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அதே நேரம் அடித்தட்டு பெண்களின் வாழ்வியலுக்கும் வழி செய்கிறது "மஞ்சள் பை அறக்கட்டளை". கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் துணிப்பையின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல அரும்பாடுபட்டு வரும் தன்னார்வ அமைப்பு குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.
துணிப்பை உற்பத்திக்கு விழிப்புணர்வு:மதுரை மாநகருக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மதிச்சியம் பகுதியில் இயங்கி வருகிறது "மஞ்சள் பை அறக்கட்டளை" எனும் தன்னார்வ அமைப்பு. நெகிழிப் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டினை தவிர்ப்பதற்காக துணிப்பைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அதுபோன்ற பைகளை உற்பத்தி செய்து, தேவைப்படும் நிறுவனங்களுக்கும் வழங்கி ஊக்குவித்தும் வருகிறது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திடம் மஞ்சள் பை அறக்கட்டளையின் இணை நிறுவனரான கௌரி கூறுகையில், 'கடந்த 2014-ம் ஆண்டு சென்னையின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீயிலிட்டு எரித்தார்கள். அதிலிருந்து வெளியான புகை மண்டலம் அப்பகுதி மக்களிடையே மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. இதுபோன்ற மாசுபாட்டையா நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்போகிறோம் என்ற குற்றவுணர்வு மேலோங்கியது.
"மஞ்சள் பை அறக்கட்டளை":அச்சமயம் தோன்றியதுதான் மஞ்சள் பை அறக்கட்டளைக்கான எண்ணம். இதனை ஒரு விழிப்புணர்வின் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். முன்னரெல்லாம் மஞ்சள் பையோடுதான் மக்கள் வெளியே செல்வது வழக்கம்.
சுற்றுச்சூழலைக் காக்கும் 'மஞ்சள் பை' உற்பத்தியில் சாதனைப் பெண்கள் 200-லிருந்து 20 லட்சம்:மதுரை மக்களிடம் முன்பெல்லாம் அது வாழ்வியலாகவே இருந்தது. அந்த அடிப்படையில் மதுரையில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தொடக்கத்தில் 200 பைகள் என்றிருந்த நிலையில், இன்று மாதமொன்றுக்கு 20 ஆயிரம் பைகளை உற்பத்தி செய்து வழங்குகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் இந்த 20 ஆயிரம் பைகள் 20 லட்சம் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று என்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம்' என்கிறார்.
மேலும் பேசிய அவர், 'அரசு உதவி செய்தால் இன்னும் சிறப்பாக 5 யூனிட் வரையில் உற்பத்தியை அளிக்கலாம் என்றும்; இதன் மூலம் கூடுதலாக பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து பொருளாதாரம் ஈட்ட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்ததோடு, சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சிறிய கட்டடத்திற்குள் இயங்கும் இந்த அமைப்பில் சற்றேறக்குறைய 25-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் ஆதரவற்ற மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களாவர். அப்பெண்கள் அனைவருக்கும் தகுந்த பயிற்சியளித்து தற்போது ஒரு குடும்பமாக இயங்குகின்றனர். துணியை வெட்டி, அதனை ஸ்கிரீன் பிரிண்ட் செய்து, பையாகத் தைத்து, ஓவர்லாக் செய்து, நேர்த்தியாக அடுக்குவது வரை பெண்களே அனைத்தையும் மேற்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி அலுவலகப் பணிகளிலும் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சுற்றுச்சூழலைக் காக்கும் 'மஞ்சள் பை' உற்பத்தியில் சாதனைப் பெண்கள் தமிழ்நாடு அரசின் திட்டத்தால் மகிழ்ச்சி:கௌரி மேலும் கூறுகையில், 'இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பெண்கள்தான். இதன் மூலம் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தை மேம்படுத்துவதுடன், குழந்தைகளின் கல்விக்கு உத்தரவாதம் அளிப்பதை உறுதி செய்கிறோம். அவர்களின் தற்சார்பினை ஊக்குவிக்கிறோம். தற்போது "மஞ்சப்பை இயக்கம்" என்ற பெயரில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, எங்களது அமைப்பின் வாயிலாக பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, போட்டிகளை நடத்தி ஊக்குவித்து வருகிறோம்' என்கிறார்.
பெண்களுக்கான வாழ்வாதாரம்: மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் தீபிகா கூறுகையில், 'நம்முடைய சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பிளாஸ்டிக் எந்த அளவுக்கு காரணமாக உள்ளது என்பதை நாம் எல்லோரும் உணர்ந்துள்ளோம். ஆனால், அதற்கான தீர்வை நோக்கிய முயற்சியில் நானும் ஒரு பணியாளாக பங்கெடுப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்தப் பகுதியில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்வாதாரமாகவும் 'மஞ்சள் பை அறக்கட்டளை' இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்கிறார்.
"மஞ்சள் பை அறக்கட்டளை"-யின் பிளாஸ்டிக்கை புறந்தள்ளும் பெருமைக்குரிய முயற்சி கைகொடுக்கும் துணிப்பை தொழில்:துணி தைக்கும் பிரிவில் பணியாற்றும் பெண்கள் வெண்ணிலா மற்றும் பிரபா ஆகியோர் கூறுகையில், 'இங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த போது, ஒரு வேலையாகத்தான் நாங்கள் நினைத்தோம். அப்புறம்தான் இவர்கள் எடுத்துச் சொன்னார்கள். பிளாஸ்டிக் பையின் பயன்பாட்டை தடுப்பதற்காகவே இத்தகைய துணிப்பை உற்பத்தியில் இறங்கியுள்ளோம் என்று விளக்கினார்கள். இங்கு நாங்கள் ஒரே குடும்பத்தைப் போன்று ஒவ்வொருவரும் எங்களது பொறுப்பினை உணர்ந்து பணி செய்கிறோம். சமூகத்திற்காக நல்லது செய்யும் அதே நேரம், எங்களுடைய பொருளாதாரமும் மேம்படுகிறது. குழந்தைகளையும் நல்ல முறையில் படிக்க வைக்க முடிகிறது' என்கிறார்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை:பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதிலும், மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டிற்கும் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், அதனை ஈடு செய்யும் அளவிற்கு எங்களிடம் ஆள் பலமும், வசதியும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு உதவி புரிந்தால், இன்னும் அதிகமான பெண்களை தொழிலில் ஈடுபடுத்தி சுற்றுச்சூழலில் பெரும் மாற்றத்தையே கொண்டு வர முடியும் என்கிறார்கள், இந்தப் பெண்கள்.
சுற்றுச்சூழலைக் காக்கும் 'மஞ்சள் பை' உற்பத்தியில் சாதனைப் பெண்கள் மண் வளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு பெண்ணின் பொருளாதார பலமும் முக்கியம் என்பதை அடிநாதமாகக் கொண்டுள்ள மஞ்சள் பை அறக்கட்டளையின் முயற்சியும் நோக்கமும் பாராட்டுதலுக்கு உரியதே...
துணிப்பை ஆர்டர் செய்ய 9840166905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்..
இதையும் படிங்க: சென்னையில் 2 ஆண்டுகளில் இ-டாக்சி.. வீட்டின் மொட்டை மாடிக்கு வரும் இ-பிளேன்.. சென்னை ஐஐடி மும்முரம்..