தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி.. மதுரை பெண் காவல் ஆய்வாளர் தங்கம்,வெள்ளி வென்று சாதனை! - உலக பெண்கள் தினம்

இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கான இறகுப்பந்து போட்டியில் மதுரையைச் சேர்ந்த, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமா மாலா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி
இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி

By

Published : Mar 8, 2023, 10:12 AM IST

Updated : Mar 8, 2023, 11:54 AM IST

இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கான இறகுப்பந்து போட்டியில் மதுரை பெண் காவல் ஆய்வாளர் பதக்கம் வென்று சாதனை

மதுரை: பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 15 ஆவது அனைத்து இந்திய காவலர்களுக்கான சிறப்பு இறகுப்பந்து போட்டிகள் (Badminton) நடைபெற்றன. இதில் மொத்தம் 38 அணிகள் கலந்து கொண்டன. இதில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமா மாலா என்பவர் கலந்து கொண்டார்.

மேலும், இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்று தங்கப்பதக்கமும், தனி நபர் பிரிவில் கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், பதக்கம் வென்ற ஆய்வாளர் ஹேமா மாலாவைப் பாராட்டினார்.

அப்போது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தொலைபேசி வழியாக ஆய்வாளர் ஹேமா மாலா வழங்கிய நேர்காணலில் கூறியது, "உலக பெண்கள் தினத்தை ஒட்டி மாநகர காவல் ஆணையரின் பாராட்டு கிடைத்தது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கடுமையான பணிகளுக்கிடையே காலையும், மாலையும் குறைந்தபட்சம் 1 மணி நேரத்தையாவது ஒதுக்கி இறகுப் பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்வேன். நாள்தோறும் தவறாது பயிற்சி மேற்கொள்வேன்.

அப்படியிருந்தும் கூட இந்த முறை தனிநபர் பிரிவில் தங்கம் வெல்ல முடியாதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது. அடுத்த முறை கண்டிப்பாக தங்கப்பதக்கத்தை வெல்வேன் என்ற நம்பிக்கையும், உற்சாகமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. என்னுடன் வந்த சக காவலர்களும் எனக்கு அதிகளவில் ஊக்கமளித்தனர். பொதுவாக காவல்துறை பணி என்பது மன அழுத்தம் தரக்கூடியது தான். ஆனாலும் கூட, அதை வெல்வது நம் கைகளில் தான் உள்ளது.

என்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர்கள் அனைவருமே குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நேரம் ஒதுக்கினாலும், அவரவர் தங்களது உடலைப் பேணுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது அல்லது மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதுபோன்றே பெண்கள் அனைவரும் தங்களது உடலைப் பராமரிப்பதையும் முக்கியமாகக் கொள்ள வேண்டும்.

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. இதனை பெண் காவலர்கள் மட்டுமன்றி மற்ற பெண்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்திற்கு நமது பங்களிப்பை வழங்க முடியும்" என்று பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வண்ணம் பேசினார்.

இதையும் படிங்க: வன்முறையை தூண்டும் விதமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட்: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

Last Updated : Mar 8, 2023, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details