மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே உள்ள மூணான்டிப்பட்டியில் அமைந்துள்ளது மகிழம் நிறுவனம். இந்த நிறுவனத்தை கற்பகம் என்பவர் நடத்திவருகிறார். நிறுவனம் தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில், உள்ளூரைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களால் தயாரிக்கப்படும் பனை, வாழை நாரினாலான பொருள்களை கனடா, லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அசத்திவருகிறார்.
பனையோலைகளால் ஆன கொட்டான்கள், இடியாப்பத் தட்டு, புட்டுக் கொட்டான், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவையும், வாழை நாரிலான தோள்பைகள், காலணிகள் ஆகியவையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றது.
இது குறித்து கற்பகம் பேசுகையில், "மகிழம் என்டர்பிரைஸஸ் என்ற பெயரில் ஆறு மாதங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகவும், மண், மரபு சார்ந்த தொழில் என்ற அடிப்படையிலும் இதனைத் தொடங்கினேன்.
இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள 29 கிராமங்களுக்குப் பயணம் செய்து ஆய்வுமேற்கொண்டேன். தொழில் தொடங்குவதற்குப் பணத்தைவிட அத்தொழிலுக்கான மூலப் பொருள்கள் எளிதாகக் கிடைப்பது என்பது மிக அவசியம். எனது வெற்றிக்கு இந்தச் சூத்திரம்தான் முக்கியக் காரணம்" என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "வாழை மரத்தின் கழிவுகளைக் கொண்டு கூடைகள் பின்ன பெண்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் தயார்ப்படுத்தினேன். இதன் மூலம் மதுரை மாவட்டம் மேலூரில் மட்டும் 250 பெண்களுக்கு வேலை சாத்தியமாகியது. பிறகு பனை ஓலையிலும் பொருள்கள் செய்ய ஆரம்பித்தோம். கருப்பட்டி, பனம் பழம், பனங்கிழங்கு ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறோம்" என்கிறார்.
அண்மைக் காலமாக பாரம்பரிய பொருள்கள் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற ஈர்ப்பைப் பயன்படுத்தி உள்ளூரில் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சியை கற்பகம் மேற்கொண்டுவந்தாலும், வெளிநாட்டுச் சந்தையே தனக்கு கை கொடுப்பதாகக் கூறுகிறார். காரணம், வாழை நார் கழிவுகளில் செய்யப்படுகின்ற பொருள்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றார்.