மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பேராசிரியர்களை நியமனம் செய்ய கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி மூன்று கட்ட விசாரணை தற்போதுவரை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், பேராசிரியர் நியமன முறைகேடு, நிர்வாக சீர்கேடு, ஆளும்கட்சி தலையீடு ஆகியவற்றைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வக்பு வாரிய கல்லூரியை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, 'வக்பு வாரிய கல்லூரியில் அமைச்சர்களின் ஆதரவோடு பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வக்பு வாரிய கல்லூரியில் அனைத்தும் லஞ்சம் என ஆகிவிட்டது. சமுதாய கல்லூரியை ஊழலால் சீரழித்து மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கின்றனர். ஊழல் செய்த கல்லூரி செயலர் ஜமால் மைதீனை வெளியேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக கல்லூரிக்குள் சென்று வெளியேற்றும் போராட்டம் நடத்துவோம்' என்றார்.