மதுரை: ஒத்தக்கடை அருகே உள்ளது காயாம்பட்டி. 200-க்கும் குறைவான குடும்பங்கள் வசிக்கின்ற குக்கிராமம். இவ்வூரில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் சற்றேறக்குறைய 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கரோனா பெருந்தொற்றுக் காலம் என்பதால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.
தொலைக்காட்சி, செல்பேசி என குழந்தைகளின் உலகம் வெகுவாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் இதுவரை கற்ற கல்வியை நினைவுக்குக் கொண்டுவரும்விதமாக காயாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மாலை நேர வகுப்பு எடுத்துவருகின்றனர்.
மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்தத் தனிப்பயிற்சி இரவு 9 மணிவரை நீடிக்கிறது. சரியாக ஆறு மணி அளவில் குழந்தைகள் அனைவரும் மிகச் சீராக உடை அணிந்து அலங்காரம் செய்து பள்ளிக்குச் செல்வதுபோல் ஊர் மந்தைக்கு வருகிறார்கள். அங்கே தங்கள் கையோடு கொண்டுவந்த துணி அல்லது சாக்குப் பையை விரித்து அதன் மீது அமர்ந்துகொண்டு பாடப்புத்தகங்களை விரித்துவைத்து வாசிக்கத் தொடங்குகின்றனர்.
குழந்தைகளுக்கு எடுக்கப்படும் பாடம்
முதலாவதாக ஆனா... ஆவனா... பிறகு ஏபிசிடி அதற்குப் பிறகு ஒன்றிலிருந்து 15 வரை வாய்ப்பாடு. ஒரு குழந்தை சொல்ல பிறர் அனைவரும் சத்தமாகத் திரும்பச் சொல்கிறார்கள்.
ஆறு முப்பது மணியிலிருந்து ஏழு முப்பது மணிவரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கும், ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணிவரை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கும் பிரித்து வகுப்பு எடுக்கின்றனர்.
வகுப்பறை முடியும்போது கொடுக்கப்படும் வீட்டுப் பாடத்தை மறுநாள் குழந்தைகள் தவறாமல் செய்துவிட்டு வர வேண்டும். அதற்குத் திருத்தி மதிப்பெண் அளிக்கிறார்கள் இளைஞர்கள்.
குழந்தைகளின் கல்வித் திறன் மேம்பட டியூசன்
இளங்கலை பொருளாதாரம் பயின்றுவிட்டு தற்போது புகைப்படக்காரராகப் பணியாற்றும் காளிதாசன் இந்த டியூஷனை ஒருங்கிணைப்புச் செய்கிறார். அவர் கூறும்போது, ”தற்போது பள்ளிகள் திறக்கப்படாத காலமாக இருப்பதால் குழந்தைகளின் வாசிப்பு, கல்வித்திறன் குறைந்துகொண்டே-வருகிறது. அதனைச் சரிசெய்வதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
நாங்கள் இந்த டியூஷனை தொடங்கும்போது பெரும்பாலான குழந்தைகள் தங்கள் படிப்பை மறந்துவிட்டார்கள். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் மட்டுமே அந்தப் படிப்பை மிகச் சரியாக நினைவில் வைத்துள்ளார்கள். பிறர் அனைவரும் அவ்வாறு இல்லை.
தற்போது நாங்கள் தொடங்கியுள்ள இந்தத் தனிப்பயிற்சி மூலமாக குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படத் தொடங்கியுள்ளது. இதனை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் மொச்சை, உளுந்து, தட்டாம் பயிறு, சுண்டல், பாசிப்பயிறு, கடலைப்பருப்பு என வழங்கிவருகிறோம். வாரத்திற்கு ஒருநாள் முட்டை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்துவிடுகிறோம்” என்கிறார்.
குழந்தைகளுக்குச் சிற்றுண்டி
தங்கள் நட்பு வட்டம், தெரிந்தவர்கள் அனைவரிடமும் சிற்றுண்டி வழங்குவதற்கு உதவி பெறுகிறார்கள். சமூக வலைதளங்களின் மூலமாக இந்தச் செய்தியைச் சொல்லி விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக குழந்தைகளுக்குச் சிற்றுண்டி வழங்க ஏற்பாடுசெய்கின்றனர்.