மதுரை:மதுரை ரயில் நிலையம் - பெரியார் பேருந்து நிலையத்துக்கு நடுவில் மதுரை நகரின் முக்கிய அடையாளமாக இருப்பது தான் விக்டோரியா எட்வர்டு மன்றம். கடந்த 1902ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை பிரிட்டிஷ் ராணியின் பெயரால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நூலகம், கூட்ட அரங்கம் மற்றும் அருங்காட்சியகம் என அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதுரையிலுள்ள முக்கிய பிரமுகர்களால் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டது.
மதுரையின் இதயப்பகுதியாகத் திகழும் 'டவுன் ஹால் ரோடு' என்ற பெயர், இங்குள்ள டவுன் ஹால் கட்டடம் அடிப்படையில் வந்ததாகும். பின்னாள்களில் டவுன் ஹால் கட்டடம் ‘தங்க ரீகல்’ திரையரங்கமாக மாறியது. மன்றத்தின் மொத்த வளாகமும் 1 ஏக்கர் 33 சென்ட்டில் அமைந்துள்ளது. மதுரை மாநகரிலுள்ள முக்கியப் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் இதன் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்து வருகின்றனர்.
அன்றைய காலகட்டத்தில் மதுரையில் நடைபெற்ற பல்வேறு சுதந்திரப் போராட்டங்கள், சமூக நீதிப் போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தலைவர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் பல இந்த வளாகத்தில் தான் நடைபெற்றுள்ளன. இந்த மன்றம் பதிவு செய்யப்பட்டு நிர்வாக நடைமுறைகளோடு செயல்படத் தொடங்கிய 1907ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 1998ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு புதுப்புது நிர்வாகிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.
சர்சைகளில் இயங்கும் மன்றம்: பல ஆண்டுகளாகவே இந்த விக்டோரியா எட்வர்டு மன்றம் குறித்து பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இஸ்மாயில் என்பவர் மன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 'பல்வேறு திறமைகளின் அடிப்படையில்' பொறுப்பிலிருந்து வந்துள்ளார். இஸ்மாயில், தலைவராக இருந்த காலகட்டத்தில் மன்றம் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி, தனது மதிப்பை இழக்கத் தொடங்கியுள்ளது.
பொதுச் சொத்தை தனது சொத்தாகக் கருதி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் இஸ்மாயில் ஈடுபடத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டுகின்றனர் விக்டோரியா எட்வர்டு மன்ற மீட்பு இயக்கத்தினர். இது குறித்து மீட்பு இயக்கத்தின் தலைவர்ஐ.ஜெயராமன் கூறுகையில், “இஸ்மாயில் பொறுப்புக்கு வந்த பின்னர்தான் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த 'டவுன் ஹால்' அரங்கத்தை நிரந்தர திரையரங்காக மாற்றி வாடகைக்கு விட்டார்.
கணக்கில் காட்டாத பணம்: மாலை 6 மணி வரை மக்கள் பயன்பாட்டிற்காக இருந்த இந்த அரங்கம், மாலை 6 மணிக்குப் பிறகுதான் 2 காட்சிகள் திரையிடப்படும் திரையரங்காக இருந்தது. கிட்டத்தட்ட 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள அந்தத் திரையரங்கிற்கு இஸ்மாயில் நிர்ணயித்துள்ள வாடகை ரூ.30 ஆயிரம் மட்டுமே. அதே போன்று இந்த வளாகத்தில் அமைந்துள்ள கடைகளில் வாங்கப்படும் வாடகை ஒன்றாகவும், கணக்கில் வரும் தொகை வேறொன்றாகவும் இருந்து வருகிறது.
முறைகேடாக கடைகள் வாயிலாகப் பெறப்படும் வாடகைத் தொகை மூலமாக மட்டுமே மாதமொன்றுக்கு சராசரியாக ரூ.5 லட்சம் வரை மோசடி நடைபெற்றிருக்கும் என நம்புகிறோம். இவையெல்லாம் உதாரணம் மட்டும்தான்” என்கிறார். இஸ்மாயில் மட்டுமன்றி அவரது மகனும் சேர்ந்து கொண்டு இங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டும் ஜெயராமன், இதனை எதிர்த்து கேள்வி எழுப்பியதற்காக சில உறுப்பினர்களை மன்றத்தை விட்டு வெளியேற்றினார். அவரது அராஜகப்போக்குக்கு முடிவு கட்டவே ஒரு கட்டத்திற்குப் பிறகு விக்டோரிய எட்வர்டு மன்ற மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
இயக்கத்தின் துணைத்தலைவர்வி.எஸ்.நவமணிகூறுகையில், “மதுரையில் 4ஆம் தமிழ்ச்சங்கம் 1902ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த மன்றத்தையும் உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. 1907ஆம் ஆண்டில் சங்க சட்டத்தின் அடிப்படையில் 17/1907 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஒரு ஏக்கர் 13 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பரிகாரத் தொகையாக ரூ.7 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது.
தலைவர்களுக்கும் கட்டணம்: இந்தத் தொகையை வசூல் செய்வதற்காக ராவ் பகதூர் சீனிவாரராவ் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. பாஸ்கர சேதுபதி ரூ.2,001, பாண்டித்துரைத் தேவர் ரூ.1,000, சாயல்குடி ஜமீன்தார் ரூ.1,000, கானாடுகாத்தான் செட்டியார் ரூ.1,000, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ரூ.1,000, மதுரை மாவட்ட ஆட்சியர் ரூ.1,000 என பணம் பெறப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டது. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்ற தேசியத் தலைவர்களிலிருந்து அண்ணா, பெரியார் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் உரையாற்றிய அரங்கு இது.