மதுரை:2011ஆம் ஆண்டு தேசிய புள்ளிவிவரத்தின்படி இந்தியா முழுவதும் 4 லட்சத்து 87 ஆயிரத்து 803 பேர் மூன்றாம் பாலினத்தவர்களாக உள்ளனர். உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மகராஷ்டிரா, பிகார், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
இம்மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவரின் கல்வியறிவு 56.07 விழுக்காடு தேசிய சராசரியாகவும், 57.78 விழுக்காடு தமிழ்நாட்டின் சராசரியாகவும் உள்ளது.
டிரான்ஸ் கிச்சன்
மூன்றாம் பாலினத்தவருக்கான மக்கள் தொகையில் சரிபாதியினரே கல்வியறிவைப் பெற்றுள்ள நிலையில், அவர்களின் சமூக மரியாதைக்காகப் பல்வேறு இடங்களில் போராடிவருகின்றனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த திருநங்கையர் 12 பேர் ஒன்றிணைந்து மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே புதிதாக 'மதுரை டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
மதுரையில் 'டிரான்ஸ் கிச்சன்'- திருநங்கையர்களின் சாதனை முயற்சி மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், இதனைத் திறந்து வைத்து அவர்களை ஊக்குவித்துள்ளார். பொதுமக்கள் பலரும் திருநங்கையரின் இந்த முயற்சிக்கு ஆதரவை வழங்கிவருகின்றனர்.
உணவகத்தில் பணியாற்றும் திருநங்கை திரிஷா கூறுகையில், "குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன் இந்த உணவகத்தை நாங்கள் திறந்துள்ளோம். பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எங்களின் முதன்மையான நோக்கம்.
எங்களின் இந்த முயற்சிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். வேறு எந்தவிதமான உளவியல் நெருக்கடிகளும் இன்றி எங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும். மேலும், பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்" என்கிறார்.
பொதுநீரோட்டத்தில் கலக்கும் திருநங்கையர்களின் முயற்சி
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்டவை இந்த உணவகத்தைச் சுற்றி அமைந்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த கோரிப்பாளையம் சந்திப்பில் 'மதுரை டிரான்ஸ் கிச்சன்' அமைந்துள்ளதால், பொதுமக்களின் வரவேற்பு அமோகமாக இருக்கும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.
திருநங்கை திரிஷா, ஜெயசித்திரா 'டிரான்ஸ் கிச்சன்' உணவகத்தின் உரிமையாளர் ஜெயசித்ரா கூறுகையில், "நான் உள்பட 15 பேர் மதுரை அருகே உலகனேரியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக கேட்டரிங் தொழில் செய்து கொண்டிருந்தோம்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக எங்களது கேட்டரிங் தொழிலை மேற்கொள்ள இயலவில்லை. இதைத் தவிர வேறு தொழில் எங்களுக்குத் தெரியாது. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ஸ்வஸ்தி என்ற நிறுவனம் வழங்கிய கடனுதவியோடு இந்த உணவகத்தைத் தொடங்கினோம். பொதுமக்கள் எங்களுக்கு அதிக ஆதரவை வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
திருநங்கைகள் குறித்த சமூகத்தின் பொதுப்பார்வை தற்போது பெருமளவு மாற்றம் கண்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதே உண்மை. காவல் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் இன்று திருநங்கைகளும் வெற்றி முகத்துடன் கால் பதித்து வருகின்றனர். இது போன்ற மாற்றங்கள் பரவலாக ஏற்படும் நேரத்தில், 'டிரான்ஸ் கிச்சன்' போன்ற உணவக முயற்சியும் திருநங்கைகளின் சமூகத்தில் பரவலான நம்பிக்கை உணர்வை தோற்றுவிக்கும் என நம்பலாம்.
அரசு உதவவேண்டும்
ஸ்வஸ்தி நிறுவனத்தின் மண்டல திட்ட மேலாளராக பணியாற்றும் பிரியா பாபு கூறுகையில், "இந்த உணவகம் தொடங்குவதற்கு ஸ்வஸ்தி, விருத்தி மற்றும் ஆர்கிம் எனும் மூன்று நிறுவனங்களே நிதி உதவி அளித்தன. திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளியைத் தவிர்த்து இருவரையும் இணைத்து ஒரே சமூகமாக வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
திருநங்கை செயற்பாட்டாளர் பிரியாபாபு மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகம் காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் இயங்கும். இதன் அடுத்த கட்டமாக மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறங்க எண்ணியுள்ளோம். தமிழ்நாடு அரசு இதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும். முழுவதும் சூரியசக்தியால் இயங்கக்கூடிய வகையில் உணவகத்தை வடிவமைக்க உள்ளோம். இதற்கு தமிழ்நாடு அரசு உதவி செய்தால் சிறப்பாக இருக்கும்" என்றார்.
மாற்றம் என்பது ஒரு புள்ளியிலிருந்து தொடங்குவதுதான், அதுபோன்ற ஒரு புள்ளியிலிருந்து மதுரை திருநங்கையர், தங்கள் சமூகத்திற்கான மாற்றத்தைத் தொடங்கியுள்ளனர். இது மாநிலம் முழுவதும் விரிந்து பரவும்போது மூன்றாம் பாலினத்தவரும் பொதுச் சமூக நீரோட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு, சுய மரியாதையோடும் தன்மானத்தோடும் வாழ்வதற்கான சூழல் நிச்சயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க:திருநங்கைகளின் பசுமை வீடு... சுயம்பாய் வாழ வழிகாட்டிய தூத்துக்குடி ஆட்சியர்!