மதுரை: மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று இன்று அதிகாலையில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. ரயிலில் பற்றிய தீ அருகே இருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவிய நிலையில் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தினர். எரியும் ரயிலிலிருந்து பலரும் குதித்து உயிர் தப்பிய நிலையில், ஒருசிலர் ரயிலினுள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் வசிப்போர் காப்பாற்ற முயன்ற நிலையில், வெப்பம் காரணமாக ரயில்பெட்டியை நெருங்கக் கூட முடியவில்லை என்கிறார் மதுரையைச் சேர்ந்த மன்னன்.
நான் ரயிலில் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் தான் குடியிருக்கிறேன் என கூறிய மன்னன். ரயிலில் தீப்பற்றியதுமே பெண்களின் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பார்த்ததாகவும். அப்போது எரியும் ரயிலிலிருந்து சிலர் குதித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் அருகில் உள்ள எஸ்.எஸ்.காலனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினருடன் , பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்க போராடினோம்.
கொழுந்து விட்டு எரிந்த தீயால் எங்களால் ரயிலை நெருங்கக் கூட முடியவில்லை என கூறினார். ஸ்லீப்பர் பெட்டிகளில் மேலே படுத்திருந்தவர்கள் தான் பெரும்பாலும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர் என்றும் அவர் கூறினார். இதற்குள்ளாக ரயில்வே துறையினர், போலீசார், தீயணைப்புத்துறையினர் என எல்லோருமே வந்துவிட்டனர். எளிதில் எரியக் கூடிய பொருட்களை கொண்டு வந்ததுதான் விபத்துக்கு காரணம் என கூறிய மன்னன், 90 சதவீதம் மக்கள் இறங்கிவிட்டதாகவும், வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே சிக்கிக் கொண்டதாகவும் கூறினார்.
இதே போன்று தீவிபத்தில் தனது மனைவியை பறி கொடுத்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ் பிரதாப் சிங் சவுகான் என்ற பயணி, தங்களின் உறவினர்களை அடையாளம் காண அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். எரியும் நெருப்பிலிருந்து 5 பேரை தான் போராடி காப்பாற்றியதாகவும் ஆனால் தனது மனைவி மிதிலேஷ் குமாரி மற்றும் மைத்துனர் சத்ருக்கனன் சிங் ஆகியோரை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என அவர் வருத்தத்துடன் கூறினார். புகை அதிகமானதால் சுவாசிக்க முடியாமல் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் உதவும் பணியில் ஈடுபட்ட செல்லதுரை என்பவர் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், சடலங்களை மீட்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டதாக கூறினார். உயிர் தப்பியவர்களிடம் பேசுகையில் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்த பசின் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனமே எரிவாயு சிலிண்டர்களையும் ஏற்பாடு செய்து வழங்கியிருந்ததாகவும், 16 கிலோ எடையுடைய 2 சிலிண்டர்களை அவர்கள் கொண்டு வந்ததாகவும் கூறினார். ரயில் தீப்பிடித்த போது சிலர் கதவுகளை மூடிவிட்டதாகவும் இதனாலேயே வெளியேற முடியாமல் சிக்க நேரிட்டதாக கூறினார். எமர்ஜன்சி ஜன்னல் மூலமாக சிலர் உயிர் தப்பியதாக தம்மிடம் கூறியதாகவும் செல்லதுரை கூறினார்.
விபத்து தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், அதிகாலை 3.47 மணிக்கு இந்த ரயில் மதுரை வந்தடைந்ததாகவும், 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, 5.45 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் காலை 7.15 மணிக்கு முழுவதுமாக தீ அணைக்கப்பட்டது வேறு எந்த பெட்டியிலும் தீ பரவவில்லை என ரயில்வே கூறியுள்ளது.