மதுரை ரயில் விபத்து: டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது!! மதுரை:உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவிற்கு சுற்றுலா வந்த ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த ரயில் பெட்டியில் சிலிண்டரை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க சிலர் முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில்வே காவல்துறை தடயவியல் நிபுணர்கள் குழுவினர், சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டிகளை ஆய்வு நடத்தினர். விபத்தில் வெடித்து சிதறிய சிலிண்டரின் பாகங்களை கைப்பற்றிய அதிகாரிகள், ரயில் பெட்டிகளில் இருந்து கட்டு கட்டாக எரிந்த நிலையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து ரயில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு, மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தால், பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Madurai train fire: ரயில் தீ விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் ஒப்படைப்பு.. அமைச்சர் பி.டி.ஆர் இறுதி அஞ்சலி!
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிடோர் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஆம்புலன்ஸ் மூலம் விமான நிலையம் கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ரயில் தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தீபக் வயது 23(ஐஆர்சிடிசி உதவியாளர்), சத் பிரகாஷ் ரஷ்தோகி வயது 42( சமையல் உதவியாளர்), சுபம் காஷ்யப் வயது 19( உதவியாளர்), நரேந்திர குமார் வயது 61 தனியார் சுற்றுலா நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட வழிகாட்டி மற்றும் ஹர்திக் ஷகேனே வயது 24, சமையலர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 304, 285, 164 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தனகுமார், கைது செய்யப்பட்ட ஐந்து பேரை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் தலா 10 லட்சம் ரூபாய், தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் ரூபாய், உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் ஓமன் நாட்டில் பாலியல் தொழிலுக்கு ஏலம் விடுவதாக சர்ச்சை.. பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க புகார்!