உங்கள் வீட்டில் பயன்படாத பழைய செல்போன்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் 4 கோழிக் குஞ்சுகள் வரை வழங்கி சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு வழிகாட்டுகிறார், கோழிக்குஞ்சு வியாபாரி செல்வம் மதுரை:மனிதர்களின் நாகரிகத்தாலும், அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றத்தாலும் நாடு வளர்ச்சி பெற்று வரும் அதே வேளையில், இயற்கை தன் இயல்பையும் இழந்து வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது புதிய வரவாக வந்துள்ளவைதான் இ-வேஸ்ட் எனப்படும் மின்னனு கழிவுகள்.
மின்னனு கழிவுகள் என பார்க்கையில், பழைய கணினிகள், தொலைக்காட்சிகள், விசிஆர்கள், ஸ்டீரியோஸ் என மேலும் பல பொருட்களை உபயோகிக்கிறோம். இவற்றை வீட்டுக்கு ஒன்று என்பதுபோல் வைத்துள்ளோம். ஆனால், இவை அனைத்துக்கும் மேல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தங்கள் கைகளில் தவிர்க்க முடியாமல் வைத்திருப்பது செல்போன் என்னும் மின் சாதனத்தைத்தான்.
நம் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இந்த செல்போனை பயன்படுத்தும் நாம், அதன் வேலை முடிந்ததும் தெருக்களில் வீசி எரிந்து செல்கிறோம். இதனால் இயற்கைக்கு என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் எனும் விழிப்புணர்வும் இல்லாமலே இருந்து வருகிறோம்.
உலகம் முழுவதும் மின்னணு சாதன கழிவுகளின் பெருக்கம் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் 57.4 மில்லியன் மெட்ரிக் டன் மின்னணு கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஒவ்வோரு ஆண்டும் சராசரியாக 2 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுப் பொருட்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 347 மில்லியன் மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்யப்படாத மின்னணு கழிவுப் பொருட்கள் உலகத்தில் உள்ளதாக theroundup.org என்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது.
இதில் வேதனை என்னவென்றால், உலகில் அதிக மின்னணுக் கழிவுகளைக் கொண்டுள்ள பத்து நாடுகளில் முதல் மூன்று இடத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே உள்ளது. சீனாவால் 10,129 கிலோ டன் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றிலிருந்து 16 விழுக்காட்டை மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி பலி! முறையற்ற சிகிச்சை காரணமா? பெற்றோர் தர்ணா!
அமெரிக்கா 6,918 கிலோ டன் உற்பத்தியில் 15 விழுக்காடும், இந்தியா 3,230 கிலோ டன் உற்பத்தியில் 1 விழுக்காடும் மறுசுழற்சி செய்கின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் உற்பத்தியாகும் மின்னனு பொருட்களில் 50 விழுக்காட்டை மறுசுழற்சி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேட்டினை ஏற்படுத்தி வரும் மின்னணு சாதனப் பொருட்களின் கழிவுகள் குறித்த மேலாண்மை மிக மிக தொய்வடைந்த நிலையிலேயே உள்ளது. அந்த வகையில், ஒரு பழைய செல்போனுக்கு 2 கோழிக்குஞ்சுகள் தரப்படும் எனும் அறிவிப்போடு வந்த இருசக்கர வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கூடை முழுக்க நாட்டுக் கோழிக்குஞ்சுகளை வைத்து எடுத்து வந்த செல்வத்திடம் ஈடிவி பாரத் செய்தியாளர் பேசுகையில், வீட்டில் பயனற்றுக் கிடக்கும் செல்போன்கள், குறிப்பாக பழைய மாடல் பட்டன் போன்கள் என்றால் அவற்றை பெற்றுக்கொண்டு 2 கோழிக்குஞ்சுகளைத் தருவதாக கூறினார்.
மேலும், தற்போதைய ஆண்ட்ராய்டு வகை போனாக இருந்தால் 4 கோழிக்குஞ்சுகளைத் தருவதாக அவர் கூறினார். பெற்ற இந்த செல்போன்களை, நெல்லையைச் சேர்ந்த தன் முதலாளியிடம் கொடுத்து விடுவதாக அவர் கூறினார். பின் இது குறித்து அவரது முதலாளி அன்பு எனும் அன்பழகனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தன் வணிக தேவைக்காக பழைய செல்போன்களைப் பெற்று வந்ததாகவும், ஆனால் இந்த செயலை இந்த மண்ணுக்கு தங்களால் இயன்ற ஒரு நல்ல காரியமாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மின்னணு சாதனப் பொருட்களின் கழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதனை மக்களிடம் இருந்து சேகரித்து மறுசுழற்சிக்காக அந்தந்த செல்போன் நிறுவனங்களுக்கே திரும்ப அனுப்பி வருவதாகக் கூறிய அவர், மக்களது கவனத்தை ஈர்க்க, பழைய செல்போன்களுக்கு 2 கோழிக்குஞ்சுகள் என புதிய அறிவிப்பை அறிவித்ததாகக் கூறினார்.
மேலும் இது குறித்து அன்பு கூறுகையில், “மின்னணு சாதனப் பொருட்களின் கழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பழைய செல்போன்களை மொத்தமாக பெற்று, மீண்டும் அந்தந்த செல்போன் நிறுவனங்களுக்கே திரும்ப அனுப்பி விடுகிறேன். அவர்கள் மறுசுழற்சிக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
செல்வத்தைப் போன்று என்னிடம் 50 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் நாமக்கல்லிலிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று ஒவ்வொருவருக்கும் கூடைகளில் வழங்கி விடுவோம். அவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வரை பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து பொதுமக்களிடம் பழைய செல்போன்களைப் பெற்று கோழிக்குஞ்சுகளை மாற்றாகத் தருகின்றனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கர்நாடகா பேருந்தை மறித்து தமிழக விவசாயிகள் போராட்டம்…! தமிழகத்திலிருந்து மின்சாரம் வழங்குவதை துண்டிக்க வேண்டும் என கோஷம்!