மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் உசிலம்பட்டியிலிருந்து பாறைப்பட்டி நோக்கிச் சென்ற லாரியும் ஜோதில் நாயக்கனூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கிச் சென்ற ஷேர் ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
லாரி ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள் ஆகிய ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பள்ளி மாணவிகள் உள்பட ஐந்து பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் அளவுக்கதிகமான ஆள்களை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோ மீது அதிவேகமாக வந்த லாரி மோதி ஆறு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அப்பகுதியில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ச்சியாக நடந்துவருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.