மதுரை: நாடாளுமன்றத்துக்கான ரயில்வே நிலைக்குழு கூட்டம் நேற்று (ஜன.5) நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலைக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகள், இரட்டை இரயில் பாதை பணிகள், மின்மயமாக்கல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரூக் அப்துல்லா, கெளசலேந்திர குமார், ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கௌசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில், மதுரை தூத்துக்குடிக்கான புதிய ரயில்வே விரிவாக்கத்திட்டம் 2,053 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சமர்பிக்கப்பட்டு விட்டது. இதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில்; கன்னியாகுமரி- திருவனந்தபுரம் பிரிவுகளில் மின்சார மயத்துடன் கூடிய இரட்டைப்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.