மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா 14 நாட்கள் நடைபெறும்.
மார்ச் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான 10ஆவது நாள்சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதைத்தொடந்து 11ஆவது நாளில் பங்குனித் திருவிழாவான பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வான நேற்று (மார்ச் 23) 12ஆம் நாள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருமண நிகழ்ச்சி திருக்கோயில் ஆறுகால் மண்டபத்தில் மதியம் 1.00 மணிக்கு கடக லக்னத்தில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று 13ஆம் நாள் பங்குனித் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியைக் காணகுவிந்தனர்.சுப்ரமணிய சுவாமி - தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.இதற்கு முன்னதாக முருகன் தெய்வானை இருவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.
பின் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க சுப்பிரமணிய சுவாமியும்-தெய்வானையும் தேரில் பவனிவந்தனர்.விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பங்குனிப் பெருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் செய்தது.
சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம்