மதுரை: கடந்த 1909ஆம் ஆண்டு மதுரையிலிருந்து தேனி வரை, நறுமணப்பொருளான ஏலக்காயை பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 610 மி.மீ. கொண்ட மிகக் குறுகிய தண்டவாளப் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதை குமுளி லோயர் கேம்ப், திண்டுக்கல் சந்திப்போடும் இணைக்கப்பட்டிருந்தது. பிறகு முதல் உலகப்போர் மூண்ட காரணத்தால், கடந்த 1915ஆம் ஆண்டு இந்தப் பாதை மூடப்பட்டதுடன், தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.
கடந்த 1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நார்மன் மற்றும் மேஜோரிபேங்க்ஸ் என்ற தனியார் நிறுவனம், ஏலக்காய் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் கொண்டு செல்வதற்காக மதுரையிலிருந்து தென்காசியம்பதி (தற்போதைய போடி நாயக்கனூர்) இடையே 762 மி.மீ. கொண்ட குறுகிய (Narrow Gauge) தண்டவாளப் பாதை அமைக்கப்பட்டது. பிறகு இந்தப் பாதையும் இரண்டாம் உலகப் போர் காரணமாக கடந்த 1942ஆம் ஆண்டு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு பாதை மூடப்பட்டது.
இந்திய நாடு விடுதலைக்குப் பிறகு கடந்த 1954ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள் இந்திய ரயில்வே மதுரையிலிருந்து போடிநாயக்கனூருக்கு 1000 மி.மீ. கொண்ட மீட்டர் கேஜ் ரயில் பாதையை அமைத்தது. அச்சமயம் ஒரே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. பிறகு மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 1972ஆம் ஆண்டிலிருந்து 2 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.