மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் தமுக்கம் மைதானம், இயல், இசை, நாடகக் கலைகளை வளர்த்த மண்ணாகவும், பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு புகலிடமாகவும் திகழ்ந்த பேரரங்காகும். சென்னைக்கு எப்படி மெரினா கடற்கரையோ, அதுபோன்ற ஓரிடமே மதுரைக்கு தமுக்கம்.
இங்குள்ள கலையரங்கு, தமிழ் நாடகக்கலையின் தந்தை என போற்றப்படும் சுவாமி சங்கரதாஸின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இன்றைக்கும் இந்த மைதானத்தின் வாசலில் சங்கரதாஸ் சுவாமிகளின் சிலை கம்பீரமாக உள்ளது. மதுரையில் கடந்த 1981ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, இங்கு மிகப்பெரிய கண்காட்சி நடைபெற்றது.
இதன் முன்பகுதியில் அமைந்துள்ள வளைவு மற்றும் கல்லாலான தேரில் அமர்ந்துள்ள தமிழன்னை சிலையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மதுரை புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் இந்த மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது. அதேபோல் சித்திரை மாதம் நடைபெறும் அரசு பொருட்காட்சி, ஆண்டுதோறும் தமுக்கம் மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானம், கடந்த 2020ஆம் ஆண்டு சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், புதிய கலையரங்கு கட்டப்படுவதற்காக சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது.
தரைக்கீழ் தளத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளோடு, ரூ.47.72 கோடி செலவில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகமாக இந்த அரங்கு அமையும் வகையில் கட்டப்பட்டு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், இந்த அரங்கத்திற்கு மதுரை மாநாட்டு மையம் என முகப்பில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக கடந்த செப்டம்பர் மாதம் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் 'சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம்' என்ற பெயர் மறைக்கப்பட்டு 'மதுரை மாநாட்டு மையம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் ராணி மங்கம்மாள் பெயர் சூட்டப்பட வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை எழுப்பி வரும் நிலையில், தமிழ் மற்றும் நாடக ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மதுரை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில், ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
யார் இந்த சங்கரதாஸ் சுவாமிகள்?தூத்துக்குடியில் கடந்த 1867ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், தமிழ் நாடககக் கலையின் மீது தீராப்பற்றுக் கொண்டு விளங்கினார். பல்வேறு சபாக்களில் சேர்ந்து நடிகராக பணியாற்றினாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு நாடக ஆசிரியராக தன்னை மாற்றிக் கொண்டு கலை வளர்ப்பதில் மிக தீவிரம் காட்டினார்.
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற நாடக நடிகர்களை உருவாக்கியதில் அளப்பரிய பங்கு சங்கரதாஸ் சுவாமிகளுக்கே உண்டு. வள்ளி திருமணம், பவளக்கொடி, சுலோச்சனா சதி, பிரபுலிங்க லீலை, சிறுத்தொண்டர், பிரகலாதா, கோவலன், சதி அநுசூயா, அல்லி அர்ஜீனா, இலங்கா தகனம், மணிமேகலை, சீமந்தனி, மிருச்சகடி, லவகுசா, சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, பாதுகா பட்டாபிசேகம் ஆகியவற்றுடன் ரோமியோவும் ஜூலியத்தும் போன்ற நாடகங்களை எழுதி ஆயிரக்கணக்கான மேடைகளில் ஏற்றினார்.
அண்ணா திறக்காமல் போக காரணம்?இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளரும் எழுத்தாளருமான கதிர்நிலவன் கூறுகையில், 'இடிக்கப்படுவதற்கு முன்பாக சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் மற்றும் பிரம்மாண்டமான படங்களோடுதான் அரங்கத்தின் உள்பக்கம் காட்சியளித்தன.