மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற செல்வி பிரேமலதா என்பவர், 2008ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தமிழ்நாடு அரசின் மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் மிகுந்த ஆர்வத்தோடு பங்குபெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது கல்லூரியில் படித்து வரும் அவர், ஐநா மனித உரிமை கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அழைப்பையேற்ற பிரேமலதா அக்டோபர் 1, 2ஆம் தேதிகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
இதையடுத்து இன்று மதுரை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய பாஸிடிவ் டிக்னிட்டி (positive dignity) என்னும் குறும்படம் அங்கு திரையிடப்பட்டு, அது சம்பந்தமாக என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கான பதில்களையும் நான் கூறினேன்.
பிற நாடுகளிலிருந்து வந்தவர்களின் பேச்சுகளையும் கவனித்தேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது. மேலும், இந்த மனித உரிமைக் கல்வியை அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என்பதே எனது விருப்பம். மனித உரிமைக் கல்வியை மாணவர்கள் மத்தியில் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்" என்றார்.
இதையும் படிங்க:திருவள்ளூரில் வேகமாகப் பரவும் டெங்கு: நடவடிக்கை எடுக்குமா அரசு?