உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க சாதனைப் பக்கங்களை கொண்டு இன்றளவும் திகழ்ந்து வருகிறது. வெள்ளையர்களை விரட்டுவதற்காக அகிம்சை வழியில் இந்தியாவின் திக்கெட்டும் பயணம் செய்து வெகுஜன மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி, அவர்களை ஒன்றுதிரட்டிய இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை சாமானியனே, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக இந்திய துணைக்கண்டம் முழுவதும் பயணம் மேற்கொண்ட காந்தியின் பாதச்சுவடுகள், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலும் பரவலாகப் பதிந்து விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென்று ஒரு முத்திரையைக் கொண்டு திகழ்கிறது.
மகாத்மாவின் மதுரை பந்தம்
காந்தியடிகள் குறித்து 'மதுரையில் காந்தி' எனும் தலைப்பில் நூல் எழுதிய டாக்டர் ராம் பொன்னு அளித்த நேர்காணலில், "1919ஆம் ஆண்டு மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் ரவுலட் சட்ட எதிர்ப்புக்காக தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி முதன்முதலாக மதுரை வந்த காந்தி, அன்றைய தினம் ஆழ்வார்புரம் சாலையில் அமைந்திருந்த ஜார்ஜ் ஜோசப் மாளிகையில் தங்கினார்.
மீண்டும் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் ஒத்துழையாமை இயக்க பரப்புரைக்காகவும், சுதேசி கதர் பிரசாரத்திற்காகவும் மதுரை வந்த காந்தி, மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். அப்போது விவசாயிகள் அரைநிர்வாண உடை அணிந்திருப்பதைப் பார்த்த காந்தி, வறுமையில் வாடித் தவிக்கும் இந்த பாமர மக்களில் தானும் ஒருவன்தானே என்று நினைத்து அன்று முதல் தானும் அரையாடையை உடுத்த முடிவு செய்தார்.
கதர் ஆடையுடன் காந்தி பேசிய இடத்தில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள சிலை அதே நாள் மாலை மதுரை-ராமநாதபுரம் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக "அரையாடை"யுடன் மேடையில் பேசினார், காந்தி. ராயலு அய்யர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு அருகிலுள்ள அந்த இடம், இன்று காந்திப் பொட்டல் என்று வழங்கப்படுகிறது. அந்த மருத்துவமனைக்கு முன்பாக, காந்தியடிகள் பேசிய இடத்தில் அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
1927ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 30ஆகிய தேதிகளில் கதர் பரப்புரைக்காக மதுரை முழுவதும் காந்திப் பயணம் மேற்கொண்டபோது அப்போதும் ஜார்ஜ் ஜோசப் மாளிகையில் தான் தங்கினார். அதற்குப் பின்னர் 1934ஆம் ஆண்டு ஜனவரி 25, 26ஆகியதேதிகளில் ஹரிஜன நல யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரை வந்திருந்தார், காந்தி. அன்றைக்கு மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் இல்லத்தில் தங்கினார்.
1934ஆம் ஆண்டு காந்தி தங்கிய என்.எம்.ஆர் சுப்புராமன் அவர்களின் இல்லம் என்.எம்.ஆர் சுப்புராமன் அண்ணன் வழி பேரன் ஜோதி பிரகாஷ் இதுகுறித்து கூறுகையில், "மகாத்மா எங்கள் வீட்டிற்கு வருகை தந்த காலகட்டத்தில் ஹரிஜன நல யாத்திரையின் ஒரு பகுதியாக அச்சம்பவம் நிகழ்ந்தது. அந்நேரம் என்னுடைய சித்தப்பா சிவபிரகாஷ் நான்கு வயது சிறுவர். காந்தியின் மடியில் சென்று அமர்ந்து கொண்டார். அதனை காந்தியாரும் வெகுவாக ரசித்து வரவேற்றார் என்று என்னுடைய அப்பா கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தங்கியிருந்த இல்லம் என்பதால், இன்றுவரை பழமை மாறாமல் அந்த வீட்டை பராமரித்து வருகின்றனர்.
அதற்குப் பிறகு 1937ஆம் ஆண்டு ஜனவரி 12 மற்றும் 21ஆம் தேதிகளில் திருவிதாங்கூர் செல்லும் வழியில் காந்தி செல்லும் போதும், வரும் போதும் மதுரை வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அச்சமயம் மதுரையில் அவர் எங்கும் தங்கவில்லை. அதற்குப் பிறகு 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பிற்படுத்தப்பட்டோர் வழிபடுவதற்காக அனுமதிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது சிவகங்கை மன்னருக்குச் சொந்தமான மாளிகையில் தங்கினார். அந்த இடம் தற்போது மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் பாழடைந்து காணப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த காந்தி காந்தியின் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமாக திகழ்வது காந்தி நினைவு அருங்காட்சியகம். அதன் இயக்குநர் நந்தா ராவ் கூறுகையில், "தேசப்பிதாவின் நினைவைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட அருங்காட்சியகம் என்ற பெருமை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு உண்டு. காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் அணிந்திருந்த துண்டு, அவரின் ரத்தக் கரையோடு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக 6 லட்சம் பேர் இங்கு வருகை தந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். மகாத்மாவின் பெருமையை இந்தியா மட்டுமன்றி உலக அளவில் கொண்டு செல்வதில், மதுரை காந்தி அருங்காட்சியகம் இப்போதும் பெயர் பெற்று விளங்குகிறது” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
மகாத்மா காந்தி அருங்காட்சிகம் தேசத்தின் விடுதலைக்காக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பம்பரமாய் சுற்றிய அந்தப் பெருமகனின் நினைவுத்தடங்கள் மதுரையின் வரலாற்றுச் சுவடுகளாய் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. அதனை வருங்கால தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக வரலாற்றுச் சின்னமாய் மாற்றி பாதுகாக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதையும் படிங்க:காந்தி- அம்பேத்கர் நம்பிய நாட்டின் பன்முகத்தன்மை.!