தென்னக ரயில்வே திருச்சி லோன் சொசைட்டி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) பொதுச்செயலாளர் கண்ணையா பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"மிகப்பெரிய லாபத்தில் இயங்கி வரும் இந்திய ரயில்வே கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்குகளை மத்திய அரசு தற்போது தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சித்து செய்துவருகிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு 150 ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
15 பெட்டிகள் கொண்ட ரயில்களை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த 40 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவில் உள்ள மிகப்பெரும் கம்பெனிகளுக்கும் அறிவிப்பு செய்துள்ளது. இந்த ரயில்களை அடுத்த 33 வருடங்களுக்கு அவர்களே பராமரிப்பு செய்யலாம்.
அதேபோல் தண்டவாள பராமரிப்பு ஓட்டுநர்கள் நியமனம் என அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்று விதிமுறைகளில் தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 500 ரயில்கள் வரை தனியாருக்கு விற்பனை செய்யலாம் என்ற விதிமுறைகளை மேலும் தளர்த்தி உள்ளது.
இதுபோன்ற தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளால் இந்தியாவிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிக கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் தற்போதைய தொழிலாளர் சட்டங்களை திருத்தி இண்டஸ்ட்ரியல் ஒர்க்கர்ஸ் என்ற சொல்லக்கூடிய நிரந்தர பணியாளர்களின் பணிகளையும் கேள்விக்கு உள்ளாக்கப் போகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தருகின்ற அழுத்தத்தின்படி, மத்திய அரசு தொடர்ந்து செயல்படுகிறது.