'மாசில்லா மதுரை' திட்டத்தின் கீழ் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், 'ஒரு நகரத்தை திடீரென உருவாக்க முடியாது. ரோம் நகரை உருவாக்கியது போல, நமது மதுரையை நல்ல மதுரையாக... மாமதுரையாக அலுவலர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்தி வைத்துள்ளனர். தொன்மையான நகரங்களின் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதிக்குள், வைகையில் கழிவுநீர் எங்கும் கலக்காதவாறு, ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகளால், மதுரை விரைவில் சிட்னி நகரைப் போல மாறப்போகிறது.
அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு வாட்ஸ்அப்பில் எது எதற்கோ வாக்களிக்கும் மக்கள் மதுரை மாநகராட்சிப் பணிகளை பாராட்டி வாக்களிக்க வேண்டும். பிப்ரவரி ஒன்று முதல் 21ஆம் தேதி வரை, மதுரையை சிறந்த நகரமாகத் தேர்வு செய்ய, மதுரை மக்கள் வாட்ஸ்அப்பில் வாக்களிக்க வேண்டும். மேலும், மதுரையின் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர கட்டப்பட்டு வரும் பாலங்களின் கட்டுமான பணியும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டமும் கூடிய விரைவில் நிறைவு பெறும்' என்றார்.
இதையும் படிங்க: ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எதுவும் பட்ஜெட்டில் இல்லை’ - கனிமொழி