தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் படுதோல்வி - சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு - ஸ்மார்ட் சிட்டி திட்டம் படுதோல்வி

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான தலைமை அலுவலர்கள் நியமிக்காமலே பணிகள் நடைபெறுவது தமிழ்நாடு அரசின் நிர்வாக படுதோல்வியைக் காட்டுகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Madurai Smart City Project was Failure said MP Su.Venkatesan
Madurai Smart City Project was Failure said MP Su.Venkatesan

By

Published : Jan 20, 2021, 11:16 AM IST

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழுவினர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான சி.இ.ஓ.க்கள் நியமிக்கப்படவில்லை. தலைமையே இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கக் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிர்வாகம் பலவீனமாக உள்ளது. இது தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய தோல்வி.

மதுரை ஸ்மார்ட்சிட்டி திட்டம் மக்கள் பணத்தை சூறையாடகூடிய வாசலாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனைக் குழு கூட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூட்டப்படவில்லை. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மக்களின் பங்கேற்பே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்தும் கேட்கப்படவில்லை.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எந்த வரைமுறையுமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படாமல் நடைபெற்று வருகின்றன. முறையற்ற திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாக உள்ளது என அதிர்ச்சியான ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. காற்று மாசு மக்களின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் உரிய காலத்திற்குள்ளான பணிகளை கூட முடிக்கவில்லை, இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம்.

மதுரையிலுள்ள 50 விழுக்காடு மக்கள் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசிவரும் நிலையில், தற்போது பெரியார் பேருந்து நிலைய விரிவாக்க திட்டத்தில் வணிக வளாகங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளில் நடைபெறும் புனரமைப்பு பணிகளில் மோசமான திட்ட நடைமுறைகளை செயல்படுத்தியதால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

கீழமாசி, வடக்கு மாசி வீதிகளில் பணிகளை தொடங்கும் முன்பு பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏற்கனவே நடைபெறும் பணிகளை முடிக்காமல் அடுத்த பணிகளை தொடங்கக்கூடாது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் போது புராதன சின்னங்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொல்லியல் விதிமுறைகளின்படி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் படுதோல்வி

ஸ்மார்ட் சிட்டி பணியின் தரத்தை நிர்ணயம் செய்யவதற்கான அனைத்து நிறுவனங்களும் தனியார் நிறுவனமாகவே உள்ளன. அரசு நிறுவனம் புறக்கணிப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரைகளில் அமையவுள்ள பூங்காக்களின் பிரச்னைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை மாநாகராட்சி இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். மதுரை மாநகராட்சியின் புதிய விரிவாக்கப்பட்ட பகுதியில் குடிநீர் பாதாள சாக்கடை இணைப்பை உறுதிபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

மேலும் அவர், ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டம் நடத்துவது குறித்து கேட்டபோது குழு இருப்பதே தங்களுக்கு தெரியாது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர், தொடர்ச்சியாக ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பலமுறை வலியுறுத்திய நிலையில், கூட்டத்தை கூட்டவில்லை. இனி மாதம்தோறும் மாநகராட்சி ஆலோசனைக் குழு கூட்டத்தை கூட்ட முயற்சி எடுக்கவில்லை என்றாலும் நாங்கள் கூட்டத்தை கூட்டுவோம்.

மாநகராட்சி அலுவலர்கள் யாருடைய ஒப்புதலுடன் நிதிகளை பெற்றார்கள், எந்த பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்தும், மாநகராட்சி பணிகளில் எவ்வளவு சேமிப்பு கிடைத்துள்ளது என்ற கேள்விக்கும் பதிலளித்த மாநகராட்சி ஆணையர், திட்டப் பணிகளில் எவ்வித நிதியும் சேமிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்,

பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மார்ச் 2020க்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் கோடி ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதிகளிலிருந்து சேமிக்கும் நிதியிலிருந்து மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details