முன்பகை காரணமாக இளைஞர் குத்திக்கொலை - சோழவந்தான் இளைஞர் கொலை
மதுரை: சோழவந்தான் அருகே முன்பகை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (29). இவர் கூலித் தொழிலாளி. முன்பகை காரணமாக நேற்று (ஆகஸ்ட் 26) இரவு பாண்டித்துரையை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டித்துரையை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே பாண்டித்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த காடுபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பாண்டிதுரையின் அண்ணன் செல்லத்துரையும் இதேபோல் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.