தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு குட்-பை சொல்லும் சிங்கப் பெண்கள்..!

மதுரையைச் சேர்ந்த மகளிர் திட்ட சுயஉதவிக் குழு பெண்கள், பிளாஸ்டிக் கழிவுகளை தார்ச்சாலை போடுவதற்கான மூலப்பொருளாக மாற்றி சாதனை படைத்து வருகிறார்கள். அது குறித்த சிறப்பு தொகுப்பை நாம் பார்ப்போம்...

By

Published : Nov 17, 2019, 4:39 AM IST

Updated : Nov 18, 2019, 12:59 PM IST

madurai self help group and plastics

பிளாஸ்டிக் உலகை அச்சுறுத்தும் எமனாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், அதன் பயன்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்காக உலகம் முழுவதுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தப் பிளாஸ்டிக்குகளை அழியக்கூடியதல்ல என்று கூறினாலும், இந்த மனிதர்கள் கேட்பதாக இல்லை. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்தாலும் மட்காமல் அப்படியேதான் இருக்கும். இவை மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட பெரிய அபாயமாகவே மாறிவருகின்றன.

நீர், நில வளம் மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக்கால் நிகழும் கேடினை உணர்ந்து, பிளாஸ்டிக்கை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தன. இந்தத் தடை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். இருப்பினும், உலகிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் பாதி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் ரகங்கள்தான் என்று ஐநாவின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (யு.என்.இ.பி) கூறுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் தற்காலத்தில் அதிமாக உள்ள நிலையில், அதனை மறுசுழற்சி செய்து இந்த இலக்கை எட்ட நடைமுறையில் சாத்தியமா என்பதே கேள்விக்குறிதான்.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்துதான் பயன்படுத்த முடியுமே தவிர, முற்றிலுமாக ஒருபோதும் அழிக்கமுடியாது. ஆனால், மதுரையிலுள்ள சுதேசி மகளிர் குழு மற்றும் பவளமல்லி மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் கூட்டமைப்பினர் சற்று மாற்று வழியில் சிந்தித்து பிளாஸ்டிக் கழிவுகளை, தார்ச்சாலைக்கான மூலப்பொருள்களாக மாற்றி செயல்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து, அதனைத் தங்களது மையத்திற்கு கொண்டு வந்து பின் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் தூள் தூளாக்குகிறார்கள். பின்னர் அதனை தரம் பிரித்து, எடை போட்டு தனித்தனி மூட்டையாகக் கட்டி, தேவைப்படுவோருக்கு டன் கணக்கில் அனுப்பி வருமானம் ஈட்டுகிறார்கள்.

இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவர் போதிலட்சுமி கூறுகையில், ”கழிவாய் கொட்டப்படும் பிளாஸ்டிக்கை முறையாகச் சேகரித்து, ஆக்கப்பூர்வ வழிகளில் பயன்படுத்தலாம். ஒரு கிலோமீட்டர் தார்ச்சாலைக்கு ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாம். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பயன்படுத்தக்கூடியவற்றை தரம் பிரித்து நாளொன்றுக்கு 250 கிலோ வீதம் அரைத்துப் பொடியாக்குகிறோம். இதன் மூலம் சாலையின் தரம் அதிகரிப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் குறைக்கப்படுகின்றன” என்கிறார்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு குட்பை சொல்லும் சிங்கப் பெண்கள்

இது பற்றி பவளமல்லி குழுவைச் சேர்ந்த வான்மதி கூறுகையில், ”கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது இங்கு எட்டு பேர் பணி செய்கிறோம். நாளொன்றுக்கு 100 ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம். தார்ச்சாலைக்கான மூலப்பொருளை உற்பத்தி செய்தாலும், அதனை விற்பது எங்களுக்கு மிகக் கடினமான பணியாக உள்ளது.

அதற்கு காரணம் உற்பத்தி செய்த பிளாஸ்டிக் பொருட்களை சாலைபோடும் பணிகளுக்காக மாநகராட்சிகளோ, பொதுப்பணித் துறையோ அல்லது சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளோ, கல்வி நிறுவனங்களோ எங்களிடம் வாங்குவதில்லை. அவர்கள் பெற்றுக்கொண்டால் எங்களது வாழ்வாதாரம் மேம்படும்” என்கிறார்.

விவேகானந்தர் குழுவைச் சேர்ந்த சுகுணாலட்சுமி கூறுகையில், ”பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளைத் தடுப்பதற்காக, கடந்த எட்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

பிளாஸ்டிக்கை தார்ச்சாலையின் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தவர் முனைவர் வாசுதேவன். இவர் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை தலைவராகப் பணியாற்றுகிறார். இதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றுள்ளார்.

அவர் நாமிடம் பேசுகையில், ' மிக எளிய தொழில்நுட்பம் தான் இது. ஆனால் சாலை போடும் செலவைப் பெருமளவு குறைக்க உதவுகிறது. ஒரு கிலோமீட்டர் அமைக்கப்படும் சாலைக்கு ஒரு டன் பிளாஸ்டிக் பயன்படுகிறது. இது 10 லட்சம் கேரி பைகளுக்குச் சமம். இந்தியாவில் தற்போது 46 லட்சம் கி.மீ-க்கு சாலைகள் உள்ளன. அப்படியானால் நூறு லட்சம் டன்னுக்குக் குறையாமல் பிளாஸ்டிக் தேவைப்படுகின்றன. தற்போது இந்தியாவில் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு லட்சம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்கிறார். இதற்கு தியாகராசர் பொறியியல் கல்லூரி வளாகத்தின் சாலைகள் முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

இந்தப் பணிக்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும், குறிப்பாக தமிழ்நாடு அரசின் மணிமேகலை விருதையும் இந்தக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அழிவுப்பூர்வமான ஒரு விஷயத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றுவது என்பது மனிதர் சிந்தனையில் மட்டுமே சாத்தியம். அப்படியொரு ஆக்கபூர்வ தொழில்நுட்பமாக பிளாஸ்டிக் கழிவுகளை மாற்றும் சுயஉதவிக்குழு பெண்களும், முனைவர் வாசுதேவனும் பாராட்டிற்குரியவர்களே... இவர்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து பிளஸ்டிக் கழிவுகளை சிறப்பான முறையில் நிர்வாகம் செய்ய முன் வரவேண்டும்.

Last Updated : Nov 18, 2019, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details