அளவு சாப்பாடு 80 ரூபாய், முழு சாப்பாடு 100 ரூபாய் என சாப்பாடு விற்றுவரும் உணவகங்களுக்கு மத்தியில் தனது உணவகத்தில் சாப்பாட்டினை 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவந்த ராமு தாத்தா உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை11) காலமானார். அவருக்கு வயது 91.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே 52 ஆண்டுகளாக உணவகம் நடத்திவந்தவர் ராமு தாத்தா. அவருக்குச் சொந்த ஊர் திருமங்கலம் வில்லூர். தனது மனைவி பூரணத்தம்மாளுடன் 1967ஆம் ஆண்டு அண்ணா பேருந்து நிலையப் பகுதிக்கு குடி பெயர்ந்து மனைவியின் ஆலோசனையின்படி உணவகம் அமைத்தார்.
அவர் பசியின் கொடுமையை உணர்ந்தவர். ஏழை, எளிய, கூலி உழைப்பாளர்கள் பசியால் வாடக்கூடாது என மலிவு விலையில் சாப்பாடு முடிவு செய்து 1.50 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க தொடங்கினார். அதையடுத்து 1980ஆம் ஆண்டிலிருந்து 3 ரூபாய்க்கு வழங்கினார். அவ்வாறு அவர் சாப்பாடின் விலையை 5 ரூபாயாக அதிகரித்தே 2014ஆம் ஆண்டுலிருந்துதான்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கக் கட்டிடம் அவரின் உணவகத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் எப்போதும் உணவகத்தில் கூட்டம் அலைமோதும். மதுரையில் மிகவும் பிரபலமானவராக மாறினார். பசியால் வாடிய ஒவ்வொரு ஏழைக்கும் ராமு தாத்த உணவகம் தெரியும். உணவகத்திற்கு வரும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உணவளிப்பார்.
அவர் மனைவி காலமான பிறகும் தனி ஒருவராக உணவகத்தை நடத்திவந்தார். அவரின் சேவையை பாராட்டி பல்வேறு அமைப்பினர் விருதுகள், நன்கொடைகளை வழங்கியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் உணவகத்தை நடத்தாமலிருந்துவந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் காலமானார். பசிக்கும் போது கையிலிருக்கும் 10 ரூபாய் வைத்து கூட சாப்பிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிய ராமு தாத்தவின் உயிரிழப்பு, அவரின் உணவகத்தில் உண்ட பல்லாயிக்கணக்கான மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் ஒரே நாளில் கரோனாவால் 192 பேர் பாதிப்பு!