மதுரை: தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும் (Facilitator) பணிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை அமர்த்த மதுரை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. தகுதியுள்ளோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் 6 பேரும், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 5 பேரும், மணப்பாறையில் இரண்டு பேரும், மானாமதுரையில் 2 பேரும், பரமக்குடியில் ஒருவரும், புனலூரில் 8 பேரும், கொட்டாரக்கராவில் ஒருவரும், திருநெல்வேலியில் 5 பேரும், நாசரேத்தில் ஒருவரும், திருச்செந்தூரில் ஒருவரும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
அதேபோல் விருதுநகரில் 2 பேரும், கோவில்பட்டியில் 2 பேரும், சாத்தூரில் 2 பேரும், சிவகாசியில் 2 பேரும், சங்கரன்கோவிலில் ஒருவரும், புதுக்கோட்டையில் ஒருவரும், உடுமலைப்பேட்டையில் ஒருவரும், பழனியில் ஒருவரும், கடையநல்லூரில் ஒருவரும், கல்லிடைக்குறிச்சியில் ஒருவரும், செங்கோட்டையில் 3 பேரும், சேரன்மகாதேவியில் ஒருவரும், கீழப்புலியூரில் ஒருவரும், அம்பாசமுத்திரத்தில் ஒருவரும், பாவூர் சத்திரத்தில் ஒருவரும், தூத்துக்குடியில் ஒருவரும், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் 2 பேரும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் பொதுவான நிபந்தனைகள் மேற்கண்ட ரயில் நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட ரயில் நிலையத்தின் அருகில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே அந்தந்த ரயில் நிலையத்தில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை "Sr.Divisional Commercial Manager, Southern Railway, DRM Office Madurai - 625016" என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த், மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இக்கோட்டம் 9 மாதங்களில் சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் வருவாய் 57 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ரயில்வே வாரியம் நிர்ணயித்த வருமான இலக்கைவிட 20 சதவீதம் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார். சரக்கு போக்குவரத்தில் 2.20 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டதாகவும், இது வாரியம் நிர்ணயித்த இலக்கான 1.67 மில்லியன் டன்னை விட 32 சதவீதம் கூடுதல் என்றும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிகபட்சமாக 2.2 லட்சம் டன் சரக்குகளை சரக்கு ரயில் மூலம் அனுப்பியுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் இதவரை இல்லாத அளவுக்கு அதிகப்பட்ச வருமானமாக 19.99 கோடி ரூபாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செல்போன் மூலம் இவ்வளவு டிக்கெட்கள் விற்பனையா? - ரூ.1.10 கோடி வருவாயை அள்ளிய மதுரை ரயில்வே கோட்டம்