தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெகுவிமரிசையாக நடைபெற்ற சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை!

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் உப கோவிலான புட்டுத்தோப்பு சிவன் கோயிலில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை

By

Published : Sep 9, 2019, 7:48 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா தற்போது வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. அதன் ஒன்பதாவது நாளான இன்று மதுரை புட்டு தோப்பில் உள்ள சிவ பெருமான் ஆலயத்தில் புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் துவங்கி 1.54 மணிக்கு நிறைவுபெற்றது.

வைகையில் பெருக்கெடுத்து ஓடிவரும் தண்ணீர் கரைபுரண்டு ஊருக்குள் வந்ததால் வீட்டுக்கு ஒருவர் வந்து அந்த வெள்ளத்தை அணை கட்டி தடுக்கும் பணிக்கு பாண்டிய மன்னர் அழைப்பு விடுக்கிறார். புட்டு விற்கும் வந்தி எனும் கிழவிக்கு பணி செய்ய ஆள் இல்லாத நிலையில், சிவபெருமான் மனித உருவில் உதவி செய்ய வருகிறார். அதற்கு கூலியாக கிழவி தரும் புட்டு உணவை உண்கிறார். உணவு உண்ட மயக்கத்தில் சிவபெருமான் வேலை செய்யாமல் வன்னிமரத்தடியில் படுத்துறங்கிவிடுகிறார்.

சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை

வைகையில் கரை அமைக்கும் பணியை பார்வையிட வருகின்ற பாண்டிய மன்னன் வந்திக் கிழவிக்காக வேலை செய்ய மனித உருவில் வந்த சிவபெருமான் வன்னி மரத்தடியில் உறங்குவதைக் கண்டு கோபமுற்று தடியால் அடிக்கிறார். அந்த அடி உலகத்தில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் தழும்பாக மாறி உடம்பில் பதிந்ததாக ஐதீகம் உள்ளது.

திருவிளையாடல் புராணத்தின் முக்கிய நிகழ்வான சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை பொதுமக்களின் குடிமராமத்து பணிக்கு மிகச்சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வெகு சிறப்பாக இத்திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன், ராஜா பட்டர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details