மதுரை:உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் மதுரை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். இவர்களில் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய ஏராளமானோர் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள மாசி வீதிகள், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதிகள் ஆகியப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர்.
விடுதியில் தங்க வருபவர்கள் அறை முன்பதிவு செய்யும் போது, அவர்களுடைய ஆதார் எண் அல்லது ஏதாவது ஒரு ஆவணத்தைப் பெற்ற பின்னரே அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என காவல்துறை ஏற்கனவே அறிவுறுத்தி, அந்த நடைமுறை தற்போது செயல்படுத்தபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் விடுதி நிர்வாகம், தங்குபவர்களின் ஆவணங்களை நகல் எடுத்து வைத்துக்கொள்வதால், ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் அந்த ஆவணங்கள் காவல் துறையினர் ஆய்விற்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.
இந்த நிலையில் மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்புக் கருதி கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் விடுதிகளில் தங்குபவர்களைக் கண்காணிக்க மதுரை மாநகர காவல்துறையினர் புதிய மென்பொருள் ஒன்றை விடுதிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். மேலும் அதனை நேற்று முதல் அமல்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக விடுதி நிர்வாகம் தங்குபவரின் புகைப்படங்கள், ஆவணங்களை இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கும், உதவி ஆணையருக்கும் அந்த தகவல்கள் செல்லும்.