மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டிக்டாக் செயலியில் திருப்பூரைச் சேர்ந்த துர்கா தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ராமச்சந்திரனுடன் மிக நெருக்கமாகப் பழகிய அப்பெண், அவ்வப்போது சிறிது சிறிதாக ரூபாய் 96 ஆயிரம் வரை பணத்தைப் பெற்றுள்ளார். நாளடைவில்தான் ராமச்சந்திரனுக்கு துர்காதேவியால் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரனையில், துர்கா தேவி என்ற இளம்பெண் டிக் டாக், ஃபேஸ்புக் மூலமாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கிருந்த துர்கா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பல இளைஞர்களிடம் பழகி, நம்ப வைத்து பணத்தைப் பறித்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்ததை, காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். பின், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.