மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த முருகேசன், ஆவுடை தேவி தம்பதியின் மகள் பூரண சுந்தரி. மாற்றுத்திறனாளியான இவர், தனது ஐந்தாவது வயதில் கண் பார்வையை இழந்தார்.
கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற இவர், தன் குடும்பத்தின் கடுமையான பொருளாதார சூழ்நிலையிலும் கூட மனம் தளராது போட்டித் தேர்வுகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கிய இவரது போட்டித் தேர்வுகளுக்கான பயணத்தில் பல்வேறு தோல்விகளைச் சந்தித்தபோதும் இவர் மனம் தளரவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு வங்கி தேர்வில் வெற்றி பெற்ற இவர், அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் நான்காவது முறையாக முழு வைராக்கியத்தோடு கலந்துகொண்டார். இந்த தேர்விற்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா முழுவதும் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், பூரண சுந்தரி 286ஆவது இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.