தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையின் அடையாளமான ஏ.வி. பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.. 138வது ஆண்டு விழாவில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Madurai AV Bridge: மதுரையின் நூற்றாண்டு பெருமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஏவி பாலத்தின் சிறப்பு, தொன்மை மற்றும் அதன் சாராம்சம் குறித்த விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் 138வது பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் 138வது பிறந்தநாள் கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 6:55 PM IST

Updated : Dec 8, 2023, 7:14 PM IST

மதுரையின் அடையாளமாக விளங்கும் ஏவி பாலத்தின் 138வது பிறந்தநாள்

மதுரை: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த பாலமாகவும், மதுரை மாநகரின் பிரதான சாலைகளில் ஒன்றான ஏ.வி. அதாவது ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் நூற்றாண்டு கடந்த 138ஆவது தோற்ற நாளை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஏவி பாலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு குறித்து இந்த தொகுப்பு விவரிக்கிறது.

மனித குலத்தின் நாகரிகம் எல்லாம் ஈரமணலில் இருந்துதான் தொடங்கியது. வருடந்தோறும் தண்ணீர் ஓடும் ஜீவ நதிக் கரையில் தான் பெருநகரங்களின் நாகரிகம் தழைத்தோங்கும் என்ற வரலாற்றுச் சான்றுகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது. வைகை நதிக்கரை நாகரிகம். "ஜீவநதி அல்லாது நான்கு மாதங்கள் மட்டுமே நீரோடி, வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தோன்றி தமிழ் மொழியின் தொட்டிலாக இருந்தது வைகை நதி" என்று சு.வெங்கடேசனின் 'வைகை நதி நாகரிகம்' வைகைக்கு புகழாரம் சூட்டுகிறது.

இப்படி மதுரையின் இத்தனை சிறப்புமிக்க வைகை ஆற்றினால், மதுரை மாநகரம் இயற்கையாகவே வடகரை, தென்கரை என இருப்பகுதிகளாக பிரிகிறது. முந்தைய காலத்தில் இந்த இரு பகுதிகளுக்கிடையே செல்ல மக்கள் பரிசல்களை பயன்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் வைகைக் கரையில் பல படித்துறைகள் தோற்றம் காண்கிறது. என்னதான் தற்போது பல்வேறு மண்டபப் படித்துறைகள் அழிந்திருந்தாலும் கூட, மதுரைவாசிகள் மத்தியில் இன்றளவும் மண்டபப்படியின் பெயர்கள் நியாபகத்தில் இருந்துவருகின்றன.

இதையடுத்து அப்போதே, பொதுமக்களின் பாதுகாப்பையும் வசதியையும் முன்னிறுத்தி இவ்விரு பகுதிகளையும் இணைக்க பாலம் ஒன்று கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருகரைகளையும் இணைக்கும் பாலம் கட்ட அன்றைய பிரிட்டிஷ் அரசால் மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1884ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கட்டுமான பணிகள் 1886ஆம் ஆண்டில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வருகிறது. பாலம் கட்ட செலவுத் தொகை ரூபாய் 2லட்சத்து 85ஆயிரத்து 697 ஆனதாகவும், மீதத் தொகையான 14ஆயிரத்து 303 ரூபாயை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் ஆங்கிலேயர் கால ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், "ஆங்கிலேயர்களின் மேற்பார்வையில் இந்த பாலம் கட்டப்பட்டிருந்தாலும் தமிழர்களின் கட்டுமான முறைப்படி சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் 40 அடி அகலத்தில் 820 அடி நீளம் கொண்டதாகவும், அடிப்பகுதியில் 16 வட்ட வளைவு தூண்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டது. இப்பாலம் 50 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்ற கட்டுமான உறுதி மொழி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 88 ஆண்டுகள் கடந்தும் உறுதித் தன்மையுடன் மதுரை வாழ் மக்களின் இன்றைய பயன்பாட்டிலும் பிரதான சாலையாக இயங்கி வருகிறது.

பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, அதனை திறந்து வைப்பதற்காக வருகை தர விருந்த பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர், மதுரையில் அச்சமயத்தில் பரவிய ப்ளேக் நோய் காரணமாக அவரது பயணத்தை ரத்து செய்ததால், பாலத்தை கட்டிய பொறியாளர் திறந்து வைத்ததுடன், பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் பெயரேயே அந்த பாலத்திற்கும் சூட்டுகிறார்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, வைகை நதி மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களும் சமூக ஆர்வலர்களுமான ராமசுப்பிரமணியன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கூறுகையில், "மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலம் அதாவது ஏவி பாலம் என்றழைக்கப்படும் நூற்றாண்டைக் கடந்த பாலத்தின் 138 வது பிறந்த நாளை கொண்டாடுவதில் பெருமையாக உள்ளது. மதுரையின் அடையாளமாக திகழும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை தமிழ்நாடு அரசு பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். தென்கரையிலிருந்து 2, 7, 8ஆவது வளைவு தூண்களின் அடிப்பகுதி உதிர்ந்து காணப்படுவதால் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை பழைய கட்டுமான முறைப்படி பூச்சு பூசி பாதுகாக்க முன்வர வேண்டும்.

அரசு அதிகாரிகளின் கவனக் குறைவினால் தார்ச் சாலைகள் பாலத்தின் மேற்புறம் அடுக்கு அடுக்காக சேர்ந்து பாலத்தின் சுமை கூடி அதன் உறுதித் தன்மைக்கு கேடு விளைவிக்கின்றது. பாலத்தின் மேல் பகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் போது அடிப்பகுதியில் உள்ள சாலை சுரண்டி அப்புறப்படுத்திவிட்டு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதையும் படிங்க:தமிழ் திரைத்துறை சார்பில் நடக்கவிருந்த 'கலைஞர் 100' விழா ஒத்துவைப்பு..!

Last Updated : Dec 8, 2023, 7:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details