மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பார்வதி என்ற 26 வயது பெண் யானைக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இரு கண்களிலும் கண் புரை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மேலும் பார்வதி யானைக்கு கண்களில் உள்ள புரைநோய்க்கு காலை, மாலை என இரண்டு வேளையிலும் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பார்வதி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மருத்துவ அறிக்கையும் கேட்டிருந்தார்.