மதுரை: 'தைப்பொங்கல்' திருநாளை முன்னிட்டு மதுரை 'பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி' (Palamedu Jallikattu) மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் இன்று (ஜன.16) நடைபெறுகிறது. இப்போட்டியை பாலமேடு கிராம் பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன. இன்று காலை 7 மணியளவில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர். அதன் பிறகு பாலமேட்டிலுள்ள பல்வேறு கோவில்களின் காளைகள் அவிழ்த்து விடப்படும்.
1,000 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு:பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் துவங்கும். இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர். இதுவரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாட 3,677 காளைகளும் 1,412 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இப்போட்டியில் ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, தேர்வாகும் நபர்கள் மற்றும் காளைகள் மட்டுமே களமிறங்கி விளையாட அனுமதிக்கப்படுவர். முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு: காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இதற்காக வாடிவாசல் அருகே இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல்துறை சார்பாக 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.