தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டு; பரபரப்புக்கு பஞ்சமில்லா 7வது சுற்றின் நிலவரம் என்ன?

Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டின் 7வது சுற்றின் முடிவில் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 4:19 PM IST

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, ரேக்லா ரேஸ் போன்ற போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு, திருவிழா போல் மிகவும் விமர்சையாக நடத்தப்படும். அந்த வகையில், தை மாதம் முதல் நாளான நேற்று (ஜன.15), அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் மாடு பிடி வீரர் கார்த்திக் என்பவர், 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.16) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி இன்று காலை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் துவங்கப்பட்டது. 8 சுற்றுகள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க சுமார் 3 ஆயிரத்து 677 காளைகளும், 1,412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்த நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஆயிரம் காளைகளும், 700 மாடு பிடி வீரர்களும் தேர்வாகி போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.

மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில், ஒவ்வொரு சுற்றிலும் 50லிருந்து 75 மாடுகள் அவிழ்க்கப்பட்டும். அதேபோல், பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடு பிடி வீரருக்கு காரும், 2ஆம் இடம் பிடிக்கும் வீரருக்கு இருசக்கர வாகனமும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டின் 7வது சுற்று தற்போது முடிவடைந்துள்ளது. அதில் 460 காளைகளும், 250 வீரர்களும் களம் கண்டனர். அதில் சத்திரப்பட்டி விஜய் தாங்கப்பாண்டியின் காளை சிறப்பாக விளையாடியது. இந்த சுற்றின் முடிவில் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் என்பவரும் தலா 6 காளைகளை அடக்கி, முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். இந்த சுற்றில் 12 மாடுபிடி வீரர்களும், 12 மாட்டின் உரிமையாளர்களும், 8 பார்வையாளர்களும், 2 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 1 காவல் ஆய்வாளர் என 3 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 8வது சுற்று நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக களமிறங்கும் காளைகள்.. திணறும் மாடுபிடி வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details