தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 3வது முறையாக கார் வென்ற மாடுபிடி வீரர் பிரபாகரன்..

Palamedu Jallikattu: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. இப்போட்டியில் மொத்தமாக 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

madurai-palamedu-jallikattu-completion
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 3வது முறையாக கார் வென்ற மாடுபிடி வீரர் பிரபாகரன்...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 8:01 PM IST

மதுரை: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில், 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோயில்களுக்குச் சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் காளைகளுக்குச் சவால் விடுத்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மாடுபிடி வீரர்களையும் துவம்சம் செய்த காளைகள் வெற்றிபெற்றது.

போட்டியில், கலந்து கொண்டு சிறப்பாகக் களமாடி 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுக் கோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம் இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2ஆம் இடத்தில் சிறப்பாகக் களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுப் பசு மாடும் பரிசாக வழங்கப்பட்டது.

இதே போன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாகக் களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும், குக்கர், எல்.இ.டி TV, தங்கக் காசுகள், கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டது.

இதே போன்று போட்டியின் போது பணியில் இருந்து காவல்துறை டிஎஸ்பி, சார்பு ஆய்வாளர்கள் இருவர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 46 பேருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாளை (ஜனவரி 17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணி அளவில் தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 மாடுபிடி வீரர்களும் தங்களைப் பதிவு செய்துள்ள நிலையில், நாளை (ஜனவரி 17) அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு களத்தில் விளையாடும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரை, எலியார்பத்தி மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு..!

ABOUT THE AUTHOR

...view details