மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
'ஸ்டாலின் நடத்தி வரும் கிராமசபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்..!'- ஓபிஎஸ் விமர்சனம் - ஸ்டாலின்
மதுரை: "திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராமசபை கூட்டம், ஒரு கண்துடைப்பு நாடகம்" என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-க்கு பிறகு ஜெயலலிதா தொடர்ந்து 17 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்தினார். 27 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் ஒரு உரிமையை தமிழக மக்கள் அதிமுக-விற்கு கொடுத்துள்ளனர். ஏற்கனவே கிராமசபை கூட்டம் அரசின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் சென்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களின் குடிநீர், சாக்கடை பிரச்சனை என அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து சரி செய்து கொடுத்து வருகின்றனர், என்றார்.
ஸ்டாலின் அரசியல் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்பது கண்துடைப்பு நாடகம். ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும் சரி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி கிராம சபை கூட்டத்தை நடத்தவில்லை. தற்போது தேர்தலை மையமாக வைத்துதான் கிராம சபை கூட்டம் எனும் நாடகத்தை நடத்தி வருகிறார் என்று விமர்சித்துள்ளார்.