தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் மூதாட்டி வீடின்றி கழிப்பறையில் 20 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் அவலம்! - old lady living in toiltel

மதுரை: அனுப்பானடி சிந்தாமணி சாலையில் மூதாட்டி ஒருவர் வீடில்லாமல் ஆதரவற்ற நிலையில் கழிப்பறை வளாகத்தில் 20 ஆண்டு காலமாக வாழ்ந்துவருகிறார்.

madurai old woman living in the toilet

By

Published : Aug 23, 2019, 7:50 AM IST

மதுரை அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தங்கி, யாருடைய ஆதரவும் இல்லாமல் 60 வயதுடைய மூதாட்டி கருப்பாயி வாழ்ந்துவருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதரவற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த கருப்பாயிக்கு இந்த கழிவறை வளாகமே அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

இது குறித்து நமது செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், திருப்புவனம் பக்கத்தில் இருக்கிற பனையூர் ரெட்ட குளம்தான் எனது சொந்த ஊர். அங்கேயே பிறந்து வளர்ந்து என் உறவினர் ஒருவரையே திருமணம் முடித்து வாழ்ந்துவந்தேன். என் கணவர் இறந்த பிறகு மதுரைக்கு வந்தேன். அவரை இழந்த பிறகு வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் இந்தக் கழிப்பறை கட்டடத்திற்குள் குடிபுகுந்தேன்.

கழிப்பறையில் வாழ்ந்துவரும் மூதாட்டி

இந்தக் கழிப்பறையை பயன்படுத்த வருபவர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பெற்று அந்த வருமானத்தில் எனது வாழ்க்கை ஓடுகிறது. நாள் ஒன்றுக்கு 50லிருந்து 70 ரூபாய்வரை எனக்குக் கிடைக்கும். இதில் வரும் தொகையிலிருந்து மின்சாரக் கட்டணம் செலுத்தி, இந்தக் கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து பராமரித்துவருகிறேன்.

என்னுடைய உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்துவருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக ஒருவர் என்னிடமிருந்த ஐந்தாயிரம் ரூபாயை வாங்கினார். ஆனால் இதுவரை முதியோர் உதவித்தொகை வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.

எழுத படிக்கத்தெரியாததால் முதியோர் உதவித்தொகை வாங்குவது பற்றி எனக்குத் தெரியவில்லை. இந்த வளாகத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தற்போது என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அரசு எனக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்" என உருக்கமாக வேண்டுகோள்விடுத்தார்.

இருபது ஆண்டுகளாக கண்ணீரும் கம்பலையுமாக ஆதரவற்ற நிலையில் கழிவறைக்குள் தனது வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கின்ற கருப்பாயிக்கு அரசோ மதுரை மாவட்ட நிர்வாகமோ கை கொடுத்து காப்பற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம்.

ABOUT THE AUTHOR

...view details