மதுரை - அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பால்ராஜ், கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். அவரை, அவரது மனைவியும், மகளும் பாலரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மருத்துவர்கள் முதியவரை தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கூறியுள்ளனர்.
ஊரடங்கினால் எவ்வித வாகனமும் கிடைக்காததால், மூன்று சக்கர மிதிவண்டியில் வைத்து முதியவரை தத்தனேரி மருத்துவமனைக்கு அவரது மகளும், மனைவியும் கொண்டு வந்துள்ளனர். அங்கும் அவருக்கு சிகிச்சையளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மதுரை ராசாசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறிய மருத்துவர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
ட்ரை சைக்களில் கொண்டு வரப்பட்ட நோயாளி இதனால், காய்ச்சலால் அவதிப்பட்ட முதியவர் மொட்டை வெயிலில் 11 கிலோ மீட்டர் மூன்று சக்கர மிதிவண்டியில் செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்து, வாகன வசதி ஏற்படுத்திக்கொடுக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:'மிகுந்த கவனத்தோடு இருந்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' - ஆர்.பி. உதயகுமார்